பக்கம் எண் :

625

நாமம் நாட்டிய சவம்எனின் நாள்தொறும் ஒருவர்
ஈமநாட்டிடை இடாமல்தன் எயிற்றிடை இடுவான்
தாமம் நாட்டிய கொடிப்படைப் பதுமத்தின் தலைவன்
தூமநாட்டத்தன் என்றுளன் தேவரைத் துரந்தான்

போரின் மத்தனும் பொருவய மத்தனும் புலவர்
நீரின் மத்தெனும் பெருமையர் நெடுங்கடற்படையார்
ஆரும் அத்தனை வலியுடையாரிலை அமரில்
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய்

தம்பி முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்
கும்ப மாக்கிரிகோடு இருகைகளால் கழற்றிச்
செம்பொன் மால்வரை மதம்பட்டதாம் எனத்திரிந்தான்
கும்பகன்னன் என்றுளன் பண்டுதேவரைக் குமைத்தான்

கோளிரண்டையும் கொடுஞ்சிறை வைத்த அக்குமரன்
மூளும் வெஞ்சினத்து இந்திரசித்து எனமொழிவர்
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னைத்
தாளும் மார்பினும் தோளினும் உளஇனம் தழும்பு

தன்னையும் தெறும்தருமம் என்றிறை மனம்தாழான்
முன்னவன் தரப்பெற்றதோர் முழுவலிச் சிலையான்
அன்னவன்தனக் கிளையவன் அப்பெயர் ஒழிந்தான்
பின்ஓர் இந்திரன் இலாமையின் பேர்அதிகாயன்

தேவராந்தகன் நராந்தகன்  திரிசிரா என்னும்
மூவராம் தகைமுதல்வராம் தலைவரும் முனையின்
போவராம் தகை அழிவராம் எனத்தனிப் பொருவார்
ஆவராம் இராவணற்கு அரும்பெரும் புதல்வர்

இனையதன்மையர் வலியிவை இராவணன் என்னும்
அனையவன் திறம்யான் அறியளவுஎலாம் அறைவென்
தனையன் நான்முகன் தகைமகன் சிறுவற்குத் தவத்தால்
முனைவர் கோன்வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான்

என்னில் ஐம்பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரிஉடையன் உமையொடும் பொருந்தும்
வெள்ளியம் பெருங்கிரியினை வேரொடும் வாங்கி
அள்ளி விண்தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க