பக்கம் எண் :

630

வெந்தழித் துருகும் மெய்யன் விழுப்புகைப் படலம் விம்ம
அந்தரின் அலமந்தஞ்சி துயர்உழந்து அலக்கண் உற்றான்

நவையறு உலகிற்கெல்லாம் நாயக நீயேசீறின்
கவயம்நின் சரணம் அல்லால் பிறிதொன்று கண்டதுண்டோ
இவையுனக் கரியவோதான் எனக்கென வலிவேறுண்டோ
அவயம் நின்அவயம் என்னா அடுத்தடுத் தரற்றுகின்றான்

ஆழிநீ அனலும்நீயே அல்லவை எல்லாம்நீயே
ஊழிநீ உலகும்நீயே அவற்றுறை உயிரும் நீயே
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்குசெந்தீச்
சூழற உலைந்து போனேன் காத்தருள் சுருதிமூர்த்தி

அன்னைநீ அத்தன்நீயே அல்லவை எல்லாம்நீயே
பின்னும்நீ முன்னும்நீயே பேறும்நீ இழவும்நீயே
என்னைநீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன்ஆய
உன்னைநீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன்உன்னை

பாயிருள் சீய்க்கும் தெய்வப் பகுதியைப் பழிக்கும்மாலை
மாயிரும் கரத்தால் மண்மேல் அடியுறை யாகவைத்துத்
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை
ஆயிர நாமத்துஐயா சரணம் என்றடியில் வீழ்ந்தான்

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக் குற்றபண்பு
வார்த்தையின் அறிந்ததல்லால் தேவர்பால் வந்திலேன்நான்
தீர்த்தநின் ஆணைஏழாம் செறிதிரைக் கடலில்மினின்
போர்த்தொழில் விலக்கப் போனேன் அறிந்திலேன் புகுந்ததொன்றும்

கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்துவீயும் இட்டதொன் றொழுகா வண்ணம்
எல்லையில் காலமெல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய்
செல்லுதி சேதுஎன்று ஒன்று இயற்றிஎன் சிரத்தின் மேலாம்
             (வருணன் அடைக்கலப்படலம் 3-5, 9, 10, 13, 21)