64 கொண்டு மெய்உணர் பவன்கழல் கூடியது ஒப்பப் பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான் மாயிரு விசும்பின் கங்கை மண்மிசை கொணர்ந்தோன் மைந்த மேயின உவகை யோடு மின்என ஒதுங்கி நின்றாள் தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங்கண் ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் (அகலிகைப்படலம் 14, 15) தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய உய்யலாம் உறுதிநாடி உழல்பவன் ஒருநாள் உற்ற மையலால் அறிவு நீங்கி மாமுனிக்கு அற்றம் செய்து பொய்யிலா உள்ளத் தான்தன் உருவமே கொண்டு புக்கான் புக்கவ ளோடும் காமப் புதுமண மதுவின்தேறல் ஒக்கவுண் டிருந்த லோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் தக்கதன் றென்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் சரந்தரு சாபமல்லாமல் தடுப்பரும் சாபம் வல்ல வரந்தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா நிரந்தரும் உலகில் நிற்கும் நெடும்பழி பூண்டாள் நின்றாள் புரந்தரன் நடுங்கி ஆங்கோர் பூசையாப் போக லுற்றான் தீவிழி சிந்த நோக்கிச் செய்ததை உணர்ந்து செய்யத் தூயவன் அவனை நின்கைச் சுடுசரம் அனைய சொல்லால் ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண் டாகஎன்று ஏயினன் அவையெ லாம்வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் எல்லையில் நாணம் எய்தி யாவர்க்கும் நகைவந் தெய்தப் புல்லிய பழியி னோடும் புரந்தரன் போய பின்றை மெல்லிய லாளை நோக்கி விலைமகள் அனைய நீயும் கல்இயல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள் பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே, அன்பால் அழல்தரு கடவுள் அன்னாய் முடிவிதற்கு அருள்க என்ன தழைத்துவண் டிமிருந் தண்தார் தசரத ராமன் என்பான் கழல்துகள் கதுவ இந்தக் கல்உருத் தவிர்தி என்றான் |