பக்கம் எண் :

88

12.   ஆனையும் பூனையும் நீர்பெற்ற பிள்ளையல்லால்
          அசலார் பெற்ற பிள்ளையோ      மன்னவரே-நீர்
     மானம் வைத்தால் போதும் அணுவும் மலையாம் அந்த
          வகையை நான் அறியேனோ      மன்னவரே

13.   ஆயிரம் ஆனாலும் பெண் புத்தியை அறிய
          ஆராலும் முடியுமோ          மின்னரசே-நல்லது
     போயினது போகட்டும் ராமனை ஊரை விட்டேன்
          போகச் சொல்கின்றாய் கைகை  மின்னரசே

14.   எதுக்கு ராமனை ஊர் விட்டுப் போகச் சொல்லும் என்கிறாய்
          என்று கேட்கவந்தீரே
     பாதிக்குள் பரதனை ஊரில் தங்க வொட்டாமல்
          பண்டேன் துரத்திவிட்டீர்      மன்னவரே

15.   அவனும் சம்மதிக்கவே பாட்டனூர் போவென்றேன்
          அநியாயம் சொன்னேனோ        மின்னரசே-உனக்கு
     கவனம் இல்லையோ என்ன காரணமோ இந்த
          கபடம் பேசாதே கைகை          மின்னரசே

16.   கவனமும் உண்டு ஒரு காரணமும் இல்லை
          கபடமும் பேசவில்லை           மன்னவரே-இன்று
     இவனும் சம்மதிக்கவே ஊர்விட்டுப் போச் சொல்லும் என்றேன்
          என்ன தப்பிதம் சொன்னேன்      மன்னவரே

17.   பூமியும் தருகிறேன் பரதற்குப் பொன் முடியும்
          பூட்டுகிறேன் கைகை             மின்னரசே-என்
     சாமியை என் உயிரை ராமனைப் பிரிந்தால் நான்
          தரிக்கரியேன் கைகை            மின்னரசே

18.   என்னுயிர் அவன் போனால் தரிக்கறியா தென்றீர்
          என்ன சத்திய மிது              மன்னவரே-அவனை
     சின்னஞ் சிறுவயதில் முனிபின் போகச் சொன்னீர் உம்
          சீவனுக் குண்டோ துன்பம்        மன்னவரே

19.   கும்பிடுகிறேன் உன்தன் காலையும் பிடிக்கிறேன்
          கோபம் செய்யாதே கைகை       மின்னரசே-நீ
     எம்பெருமானை என்தன் கண்மணிராமனை இங்
          கிருக்கச் சொல் என்பாய் கைகை   மின்னரசே