பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்101


   (வி - ம்.) தீய தொழில் புரிவனவெல்லாம் பணத்தாசை யால்தான், மற்றொன்றினால்
அல்ல. பணம் பெற்றவுடனே அதைப் புதைத்து விடுவர். பணத்தைக் காத்திருப்பர்
பொன்காத்த பூதம் என்று புகலப்படுவர் என்பது. இதனாற் பயன் ஒன்றுமில்லை என்றார்
ஆயிற்று.
                                                              (105)

     ஒருசிறு தரும மேனும்
          உஞற்றிடார் இரப்போர் வந்து
     தருநிகர் கரத்தாய் என்று
          சாற்றினுங் கொள்ளா ராகிக்
     கருணைசற் றின்றி யெல்லை
          கடந்திடத் துரந்து மீள்வர்
     மருவுபல் கிளையும் ஓம்பார்
          வளம்படைத் தென்பெற் றாரால்.

   (சொ - ள்.) ஒரு சிறு தருமம் ஏனும் உஞற்றிடார் - ஒரு சிறிதளவு ஆயினும்
அறத்தினையும் இயற்றார் ; இரப்போர் வந்து தருநிகர் கரத்தாய் என்று சாற்றினும்
கொள்ளார் ஆகி கருணை சற்று இன்றி எல்லை கடந்திடத் துரந்து மீள்வர் - இரப்பவர்
வந்து கற்பகத்தைப் போலக் கொடுக்குங் கைகளையுடையோய் ! என்று (புகழ்ந்து)
கூறினும் அப்புகழை ஏற்றுக்கொள்ளாராய் இரக்கம் சிறிதும் இல்லாமல் ஊர் எல்லை
கடக்கும்படி விரட்டி மீண்டு வருவர் ; மருவு பல்கிளையும் ஓம்பார் வளம் படைத்து
என் பெற்றார் - பொருந்திய உறவினர் பலரையும் காவாமல் செல்வம் பெற்றிருந்து
பெற்றபயன் யாதோ ?

   (வி - ம்.) செல்வம் பெற்றால் இரப்போர்க் கீந்து தம் சுற்றத்தாரையும் புரத்தல்
வேண்டும். அதுவே செல்வப்பயன் என்பது.                      (106)

     முறைதவிர் கொடுங்கோல் மன்னர்
          முனிவிற்கு நனியும் அச்சங்
     கறைகெழு கரவு செய்வார்
          கரத்திற்கும் அழற்கும் அச்சம்
     மறைவறு தாய மாக்கள்
          வௌவுவர் என்றும் அச்சம்
     அறைபொருள் பெற்றா ரல்லர்
          அச்சமே பெற்றார் போலும்.