பக்கம் எண் :

102 குசேலோபாக்கியானம்

   (சொ - ள்.) முறைதவிர் கொடுங்கோல் மன்னர் முனிவிற்கு நனியும் அச்சம் -
செங்கோல் முறைமாறிய (கொடுங்கோல்) அரசர் சினத்திற்கு மிகுதியும் அச்சமாம் ;
கறைகெழு கரவு செய்வார் கரத்திற்கும் அழற்கும் அச்சம் - குற்றம் பொருந்திய களவு
செய்வார் கைக்கும் நெருப்பிற்கும் அச்சமாம் ; மறைவு அறு தாயம் மாக்கள் வௌவுவர்
என்றும் அச்சம் - மறைவற்ற தாயத்தார் (உரிமை முறையால்) கவர்ந்து கொள்வர்
என்றும் அச்சமாம் ; அறை பொருள் பெற்றார் அல்லர் அச்சமே பெற்றார் போலும் -
(இக்காரணங்களால் இவர்) சொல்லப்பட்ட பொருள் பெற்றவராகார், அச்சமே பெற்றனர்
போலும் (என்னே பொருட் பேற்றினியல்பு).

   (வி - ம்.) பொருள் உடையவர் அச்சத்தை உடையவரேயாவர். பொருளில்லாதவர்
எவர்க்கும் அஞ்சாதவர் என்று பொருளின் இகழ்ச்சி விளக்கினர். கொடுங்கோல்மன்னர்,
கள்வர், நெருப்பு, தாயத்தார் இவர்களால் கவரப்படும் என்ற அச்சம் பொருளுடையவர்
மனத்துள் மாறாமலிருக்கும் என்பது. (107)

     ஒல்லொழுக் கினரைத் தீய
          ஒழுக்கரென் றுரைக்கச் செய்யும்
     புல்லொழுக் கினரைத் தூய
          புலத்தரென் றுரைக்கச் செய்யும்
     நல்லகற் புடைய மாதர்
          நலத்தையஞ் சாமை செய்யும்
     பல்வகைத் துயருஞ் செய்யும்
          பாழ்ம்பொருள் பற்று ளார்க்கே.

   (சொ - ள்.) பாழ் பொருள் - பாழாகிய பொருளானது ; பற்று உள்ளார்க்கு -
தன்னிடத்துப் பற்று வைத்தவர்க்கு, ஒல் ஒழுக்கினரை தீய ஒழுக்கர் என்று உரைக்கச்
செய்யும் - இயன்ற நல்லொழுக்க முடையாரைக் கெட்ட ஒழுக்க முடையாரென்று
(பிறரால்) உரைத்திடச் செய்யும் ; புல் ஒழுக்கினரை தூய புலத்தர் என்று உரைக்கச்
செய்யும் - கெட்ட ஒழுக்கமுடை யாரைத் தூய்மையான அறிவொழுக்க முடையாரென்று
கூறச் செய்யும் ; நல்ல கற்புடைய மாதர் நலத்தை அஞ்சாமை செய்யும் - சிறந்த
கற்புள்ள மங்கையர்களின் கற்பின் மாட்சிக்கு அஞ்சாமையை உண்டாக்கும் ; பல்வகைத்
துயரும் செய்யும் - (இன்னும் இவை போல்வன) பலவாகிய துன்பங்களையும் உண்டாக்கும்.