பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்15


என்றார். புனைவாம் என்பது தன்மைப் பன்மை யெதிர்கால வினை முற்று. மலர்
அடி - உவமைத் தொகை. (14)

               நூல் வரலாறு
     மறைமுழு துணர்ந்த வியாதமா முனிவன்
          மைந்தனாஞ் சுகப்பெயர் முனிவன்
     கறைதபு செங்கோல் பரீட்சித்து மன்னன்
          களிப்பொடு கேட்டிடப் புகன்ற
     நிறைபுகழ்ப் பாக வதத்திலோர் கதையாய்
          நிலவிய குசேலன்மாக் கதையைத்
     துறைகெழு செஞ்சொல் தீந்தமிழ்ப் பாவாற்
          சொற்றிட லுற்றனென் மன்னோ.

   (சொ - ள்.) மறை முழுது உணர்ந்த மாவியாத முனிவன் மைந்தன் ஆம்
சுகன் பெயர் முனிவன் - வேதங்களை முற்றக் கற்று உணர்ந்த பெருமையை
உடைய வியாச முனிவர்க்குப் புதல்வராகும், சுகர் என்னும் பெயரையுடைய
முனிவர்; கறைதபு செங்கோல் பரீட்சித்து மன்னன் களிப்பொடு கேட்டிட புகன்ற
- குற்றமற்ற செங்கோலைத் தாங்கிய பரீட்சித்து என்னும் பெயரையுடைய வேந்தன்
விருப்பத்தோடு கேட்கக் கூறிய; நிறைபுகழ் பாகவதத்தில் ஒர் கதையாய் நிலவிய
குசேலன்மா கதையை - நிறைந்த புகழையுடைய பாகவதப்புராணத்தில் ஒரு
வரலாறாக நிலைபெற்று விளங்கும் குசேல முனிவர் சரிதங் கூறும் பெருமையுடைய
பகுதியை; துறைகெழு செஞ்சொல் தீ தமிழ் பாவால் சொற்றிடல் உற்றனன் -
பலவகைத் துறைகளுடன் கூடிய செஞ்சொற்களால் ஆகிய இனிய
தமிழ்ப்பாடல்களால் கூறத் தொடங்கினேன்.

   (வி - ம்.) குசேலர் கதைவந்த வழி கூறுகின்றார். வியாச முனிவன் புதல்வன்
சுகமுனிவன், பரீட்சித்து என்ற மன்னனுக்கு முதலிற் கூறியது இது. அதன் பின்
பாகவதம் என்ற புராணமாகப் பாடினார்கள். அப்பாகவதத்தில் இக்கதை
ஒரு பகுதியாயுள்ளது. அதனை யான் இப்பொழுது குசேலோபாக்கியானம்
என்ற நூலாகப் பாடத் தொடங்குகின்றேன் என்பது கருத்து. நூலின்
பெருமையும் அந்நூல் வந்த வழியுங் கூறினாராயிற்று. அகத்தில், குறிஞ்சி,
பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணைகளிலும் வரும்
துறைகளும், புறத்தில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,
வாகை முதலிய திணைகளிலும் வருந்துறைகளும் ஆம். கறை - குற்றம்,
தபு - நீங்கிய. (15)