பக்கம் எண் :

16 குசேலோபாக்கியானம்

               அவையடக்கம்
     கனைகடல் முகிலைப் பார்த்தெனீர் உவரைக்
          கழிப்பிமன் னுயிர்க்கெலாம் இனிதாப்
     புனையெனக் கேளா தெனினுமம் முகிலே
          புரியுமென் செய்யுளின் புகரை.
     நினைவரு முழுநூ லுணர்ந்தவர் அகற்றி
          நீடுல கினுக்கினி தாக்க
     அனையரை யான்கே ளாதிருந் திடினும்
          அதுபுரிந் திடலவர்க் கியல்பே.

   (சொ - ள்.) கனைகடல் முகிலை பார்த்து என்நீர் உவரை கழிப்பி மன்
உயிர்க்கு எலாம் இனிது ஆ புனைகு என கேளாது எனினும் - ஒலிக்கின்ற
கடலானது மேகத்தை நோக்கி, எனது நீரின் உவர்ச் சுவையினை நீக்கி, உலகில்
நிலைபெற்ற உயிர்கள் எல்லாவற்றிற்கும் இனிதாகும்படி செய்யென்று கேளா
தாயினும்; அம்முகிலே புரியும் - அந்த மேகந்தானே அவ்வாறு
செய்யாநிற்கும்; (அதுபோல்) நினைவு அருமுழு நூல் உணர்ந்தவர் -
நினைத்தற்கரிய பொருட் சிறப்புடைய முதல் நூலின் பொருளையறிந்த
சான்றோர்: என் செய்யுளின் புகரை அகற்றி - எனது நூலின்
செய்யுள்களிலுள்ள குற்றங்களை நீக்கி; நீடு உலகினுக்கு இனிது ஆக்க -
பெரிய இவ்வுலகத்தார்க்கு இனிதாம்படி செய்யுமாறு; அனையரை யான்
கேளாது இருந்திடினும் - அவர்களை யான் வேண்டிக் கொள்ளாது
விடினும். அது புரிந்திடுதல் அவர்க்கு இயல்பு - அதனை அங்ஙனம்
செய்திடல் அப்பெரியோர்க்கு இயல்பாம்.

   (வி - ம்.) மேகம் கடல் நீரை முகந்து உவர் நீக்கி மழை (நன்னீர்)யாகப்
பெய்து உலகுக்கு நலம் புரிவது போல என் கவியைப் புலவர் படித்துக் குற்றம்
நீக்கி உலக மக்களுக்குக் கொடுப்பது அவர் கடமையாம் என்பது கருத்து.
கனைகடல்: வினைத்தொகை. புகர் குற்றம், எழுத்துக் குற்றம், சொற்குற்றம்
பொருட்குற்றம் முதலியவைகள். நீடு+உலகம்: உகரங்கெட்டது; உலகம் இடவாகு
பெயராய் மக்களை யுணர்த்திற்று. (16)