|
வாவிகாள்
குளங்காள்நீர்
வற்றினீர்
முன்னளித்த
மேவியஇன் சுவைப்புனலால்
வீங்கினேம்
இதுபொழுது
பாவியவப் புனலளிப்பேம்
பற்றுமெனக்
கால்வதுபோல்
பூவியன்மக் கள்ளுடம்பு
பொங்குவெயர்
நீர்காலும்.
(சொ - ள்.) வாவிகாள் குளங்காள் நீர் வற்றினீர் முன் அளித்த
மேவிய இன்சுவை
புனலால் வீ்ங்கினேம் இதுபொழுது பாவிய அப் புனல் அளிப்பேம் பற்றும் என
கால்வது போல் - தடாகங்காள் சிறு குளங்காள் (நீங்கள்) நீர் வற்றி இருந்தீர்கள்
முன்னே நீங்கள் கொடுத்த பொருந்திய இனிய சுவையையுடைய நீரினால் (யாம்)
பருத்திருக்கின்றோம் இப்பொழுது பரவிய அந்த நீரினைத் தருகின்றோம் ஏற்றுக்கொண்மின்
என்று கக்குவது போல் ; பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர்காலும் -
நிலத்தின்கணுள்ள மக்களுடம்புகள் மிகுந்த வியர்வையாகிய நீரைக் கக்கும்.
(வி-ம்.) மக்களுடம்பினின்று வேர்வை யொழுகுந்தோற்றம், குளங்களே
!
பொய்கைகளே ! நீரின்றி வறந்தீரே ! உங்களிடமிருந்து நீர் குடித்தல்லவோ நாம்
பருத்தோம் ? அங்ஙனம் பருத்த உடம்பிலிருந்து நீரை உங்கட்குக் கொடுக்கின்றோம்
என்று நீரை வடிப்பதுபோலத் தோன்றிற்று. முன் உதவி செய்தவர்க்குப்பின் அந் நன்றியை
நினைத்துக் கொடுப்பதுபோல் இருந்தது என்பது குறிப்பு. இன்சுவைப் புனல் எனவும்
அதனால் பருத்தோம் எனவும் கூறியது இப்போது சுவையற்ற புனல் சிறிது தருகின்றோம்
என்பதைக் குறிப்பால் உணர்த்தியது.
(185)
நண்ணருமிக் கொடும்பருவம்
நகைதருவெள்
ளொளிகாட்டி
எண்ணும்மனங் கரைந்துருக
இந்தியமும்
உடனுருகத்
துண்ணெனும்வெந் தீவெப்பந்
தொகுமைந்தர்க்
குறுத்துதலால்
வண்ணமனி நகைத்துவர்வாய்
மடநல்லார்
தமைப்பொருவும்.
|