பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்161


பெருநகரில் என்னை யார் மதிப்பார் - சிறிதும் ஆராய்தலில்லாமல் வழிநடக்கத்
தொடங்கினேன்.

   (வி - ம்.) பொற்ற : குறிப்புவினைப் பெயரெச்சம். பொற்ற - அழகான : பொன்+து+அ.
ஆயாது வழிநடந்தேன் எனக் கழிவிரக்கமுற்றான் குசேலன்.                  (193)

     மாமகுட முடிமன்னர்
          நனிவந்து காத்திருக்குங்
     கோமகன்றன் தலைவாயில்
          எவ்வாறு குறுகுவல்யான்
     பூமலியும் அவ்வாயில்
          புகினுமவன் திருச்சேவை
     ஏமமுற ஏழையேற்
          கெளிதுகிடைத் திடுங்கொல்லோ.

   (சொ - ள்.) மாமகுட முடிமன்னர் நனிவந்து காத்து இருக்கும் கோமகன் தன்
தலைவாயில் எவ்வாறு குறுகுவல் யான் - பெருமையான திருமுடியைச் சென்னியில்
அணிந்துள்ள அரசர் பலரும் வந்து மிகவுங் காத்திருக்கின்ற இறைமகனாகிய
கண்ணபிரானது வாயில் முற்றத்திடத்தில் எங்ஙனம் சென்று யானடைகுவேன் ; பூ
மலியும் அவ் வாயில் புகினும் - பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த வாயிலில்
புகுந்தாலும் ; அவன் சேவை ஏமம் உற ஏழையேற்கு இனிது கிடைத்திடுங் கொல் -
அவனைக் காணும் காட்சிப்பேறு இன்பமுண்டாக ஏழையாகிய எனக்கு எளிதில்
வாய்த்திடுமோ ? (என்று குசேலன் கூறி வருந்தினன்).

   (வி - ம்.) மகுடம் - கிரீடம். முடி - தலை. மகுடமுடி மன்னர் - கிரீடம் வைத்த
முடியுடைய அரசர். கோமகன் - வேந்தன். குறுகுவல் - அணுகுவேன், நெருங்குவேன்.
ஏமம் உற - இன்பம் பொருந்த.                                  (194)

     கற்பகத்தைச் சார்ந்தும்வறுங்
          காய்கேட்கத் துணிவார்போல்
     பொற்புடைய எம்பிரான்
          திருமுனரி திற்புகுந்தும்
     அற்பமுறு திருவேட்டல்
          அறிவேகொல் எனவுளத்துப்
     பற்பலவும் எண்ணியயர்
     வுயிர்த்தானப் பனவனே.