பக்கம் எண் :

162 குசேலோபாக்கியானம்

   (சொ - ள்.) கற்பகத்தை சார்ந்தும் வறு காய் கேட்கத் துணிவார் போல் - கற்பக
மரத்தை அடைந்தும் பயனற்ற காயைக் கேட்க மனந்துணிந்தவர் போல ; ' பொற்புடைய
எம்பிரான் திருமுன் அரிதில் புகுந்தும் அற்பம் உறு திருவேட்டல் அறிவே' என
உரைத்து பல் பலவும் எண்ணி அயர்வு உயிர்த்தான் அப்பனவன் - அழகுடைய
எம்பெருமானாகிய கண்ணன் திருமுன் அருமையாக அடைந்தும் சிறுமை பொருந்திய
செல்வத்தை விரும்புதல் அறிவுடைமையாமே வென்று கூறி மனத்திடைப் பலப்பல
எண்ணங்களையும் நினைந்து பெருமூச் செறிந்தான் அந்த அந்தணனாகிய குசேல
முனிவன்.

   (வி - ம்.) வறுமை+காய்=வறுங்காய். செல்வம் நில்லாது அழியுந் தன்மையுடையது
என்பது தோன்ற "அற்பமுறு திரு" என்றார். அற்பம் - சிறுமை, இழிவு. இழிவாகிய
கீ்ழ்மக்களிடமும் சேர்வது நில்லாது கெடுவது ஆகிய இழிவு. அயர்வுயிர்த்தான் -
பெருமூச்சு விட்டான். பனவன் - மறையோன்.                     (195)

     என்னதுயர் இனியுறினும்
          இதுகாறும் வந்தமையான்
     முன்னம்மனைக் குரைத்தபடி
          முற்றும்போய் வருவலெனத்
     தன்னுளத்தில் எண்ணிஎழீஇத்
          தனிநடந்து சின்னாளின்
     மின்னுமி்ழ்கார் முகில்பயிலும்
          மேல்கடலின் கரையிறுத்தான்.

   (சொ - ள்.) என்ன துயர் இனி உறினும் இதுகாறும் வந்தமையால் முன்னம்
மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் என - இனி என்ன துன்பம் வந்திடினும்
இவ்வளவுதூரம் வந்துவிட்டோமாகையால் முன்னரே நம் மனைவிக்குரைத்த மொழி
தப்பாமல் முடியவும் போய் வருவோம் என்று, தன் உளத்தில் எண்ணி எழீஇ தனி
நடந்து - தன்மனத்துள் துணிந்து எழுந்து தனியே நடந்து, சில நாளில் மின் உமிழ்
கார்முகில் பயிலும் மேல் கடலின் கரை இறுத்தான் - சில நாட்களில் மின்னலைத்
தோற்றுவிக்கும் கரிய மேகங்கள் பழகும் மேற்குக் கடற்கரை வந்து தங்கினான்.

   (வி - ம்.) வருவல் - வருவேன் : தன்மை யொருமை வினை முற்று. வா + அல்,
எழீஇ - சொல்லிசையளபெடை. கருமை + முகில் = கார்முகில் : பண்புத்தொகை.
இறுத்தான் - தங்கினான்.