பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்163


     என்னவெடுத் துரைத்தசுக
          முனிவனிணை யடிவணங்கி
     மன்னர்மணி முடியிடறும்
          வார்கழற்கால் வயவேந்தன்
     நன்னர்கொள்மற் றைக்கதையும்
          நடத்துகென நனியிரப்ப
     இன்னலிலா துயர்ந்தமுனி
          இன்புறவாய் மலர்கின்றான்.

   (சொ - ள்.) என்ன எடுத்து உரைத்த சுகமுனிவன் இணை அடிவணங்கி மன்னர்
மணிமுடி இடறும் வார் கழல் கால் வயவேந்தன் நன்னர் கொள் மற்றை கதையும்
நடத்துக என நனி இரப்ப - என்றிவ்வாறு எடுத்துக் கூறிய சுகமுனிவரை இரண்டு
திருவடிகளையும் தொழுது அரசர்களின் மணிபதித்த முடிகளில் இடறுகின்ற வீரக்
கழலணிந்த கால்களையும் வெற்றியினையு முடைய பரீட்சித்து வேந்தன், நன்மையைக்
கொண்டுள்ள தான மேற்றொடரும் வரலாற்றையுங் கூறி முடித்திடுக வென்று மிகவும்
இரந்து கேட்கவே ; இன்னல் இலாது உயர்ந்த முனி இன்பு உற வாய் மலர்கின்றான்-
(பந்தபாசத்) துன்பத்தை நீங்கி மேன்மையுற்ற முனிவர்பிரான் மகிழ்ச்சி மிக வாய் மலர்ந்து
கூறுவானானான்.

   (வி - ம்.) சுகமுனிவன் கூற அதுகேட்ட பரீட்சித்து மன்னன் முழுவதுங் கூறி
முடிக்கவேண்டுமென்று வேண்ட அவ்வாறே எஞ்சிய கதையையும் எடுத்துக் கூறகின்றனன்
சுக முனிவன் என்பது. இணையடி : பண்புத்தொகை. நடத்துக + என - நடத்துகென :
அகரந் தொகுத்தல். கழல்கால் - கழலையணிந்த கால் என விரியும்.
                                                            (197)