கள் மிகுந்து எங்கும் நிறைந்து மணங்கமழ்வதாற்
புலால் நாற்றம் மாறிற்று என்றும்
தோன்றியது. இஃது உவமையணி. (206)
அலையெறி மணியும் முத்தும்
அலகும்பல் மீனும்
மற்றுந்
தலைமயக் குற்று முன்றிற்
சார்தரு குப்பை
யாகக்
குலைமருங் கியற்றும் பெண்ணை
மடற்புனை குரம்பை
தோறும்
வலைவளத் தொழில்மேற் கொண்டு
வாழ்வன பரதச்
சாதி.
(சொ - ள்.) அலை எறி மணியும் முத்தும் அலகும் பல் மீனும் மற்றும்
தலைமயக்குஉற்று முன்றில் சார்தரு குப்பையாக - கடல் அலையானது மோதி வீசுகின்ற
மணிகளும், முத்தும் பலகறையும் பலவகை மீன்களும் மற்றுமுள்ள பொருள்களும்
கலந்து தம் முற்றத்தில் பொருந்திய குப்பையாகக் கிடக்கவும், குலைமருங்கு இயற்றும்
பெண்ணை மடல்புனை குரம்பை தோறும் - குலைகளைத் தன் பக்கத்திலே
கொண்டிருக்கும் பனைமடலால் வேய்ந்துள்ள குடிசைகள் தோறும், வலைவளம் தொழில்
மேற் கொண்டு வாழ்வன பரதச்சாதி - வலைவீசும் வளமான தொழிலைக் கைக்கொண்டு
வாழ்ந்திருக்கின்றனர் (அங்குள்ள) பரதவர் என்ற குலத்தினர்.
(வி - ம்.) வளத்தொழில் என்பது வளத்தைத் தரும் தொழில் எனவும்
விரியும்.
வளம் - செல்வம், சிறப்பு, பெருக்கம் இவற்றை யுணர்த்தும். மணியும், முத்தும், அலகும்,
பல்மீனும் முன்றிலிற் குப்பையாகக் கிடந்தன எனவே அவையே அவர்கட்குச் செல்வம்
என்பது குறிப்பு. அச் செல்வங்களை வைத்துப் போற்ற இடமில்லாததால் முன்றிலிற்
கிடந்தன எனக் கொள்க.
(207)
அயில்விழிப் பகையா மென்ப
தறிந்துயிர்
செகுப்பார் போலக்
குயின்மொழிப் பரவ மாதர்
குரைகடல் மீன்கள்
போழ்ந்து
வெயிலிடை உணக்கிப் பின்னும்
விற்றுள மகிழ்வார்
யாரே
செயிருறு சீற்றத் தெவ்வைச்
சிதைத்துளத்
துவகை செய்யார்.
|