பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்175


     கொழுஞ்சுறாக் கொழுமீ னோடு
          கூட்டிநன் கருந்த ஆங்காங்
     கெழுங்கரும் பெண்ணை தோறும்
          இறக்குகள் மாறப் புக்கார்
     செழுங்கதிர் தரளக் குப்பை
          சேயொளிப் பவளஞ் சால
     வழுங்கலில் பரத மாக்கள்
          எடைக்கெடை அளிப்பக் கொள்வார்.

   (சொ - ள்.) கொழும்சுறா கொழுமீன்ஓடு கூட்டி நன்கு அருந்த - கொழுமையாகிய
சுறாமீனைக் கொழுமீன்களோடு சேரத்து நன்றாய் உண்ணுவதற்கு, ஆங்கு ஆங்கு
எழும் கரும்பெண்ணைதோறும் இறக்கும் கள் மாறபுக்கார் - அங்கங்கே தோன்றும்
கரிய பனைமரங்களிலிருந்து இறக்குகின்ற கள்ளினை விலைக்கு விற்கப் புகுந்தவர் ;
செழும்கதிர் தரளம்குப்பை சேய்ஒளி பவளம் - செழுமையாகிய ஒளியையுடைய
முத்துக்குவி்யல்களையும், சிவந்த ஒளியையுடைய பவளங்களையும், அழுங்கல்இல் பரத
மாக்கள் எடைக்கு எடை சால அளிப்பக் கொள்வார் - வருந்துதலில்லாத பரதகுல
மாக்கள் எடைக்கெடையாக மிகவும் கொடுப்ப வாங்கி வருவார்.

   (வி - ம்) கள் விற்கப் பரவர்சேரி சென்றவர்கள் கள்ளுக்கு எடைக்கு ஒத்த
எடையாக முத்தும் பவளமும் அள்ளிக் கொடுக்க வாங்கி வருவார் என்பது. முத்துக்
குவியல்களையும் பவளத்திரள்களையும் வருத்தமின்றி எடுத்து வழங்குவர் என்பது
தோன்ற "அழுங்கலில் பரதமாக்கள்" என்றார். கொழுமீன் என்பது மீன் வகையில்
ஒன்று. சுறா - மகரமீன்.
     "கொழுமீன் உண்ட அன்னங்களே"
               -திருக்கோவையார், 188. உரை.                   (211)

     பெருகிய செல்வ ருள்ளும்
          பயனிலார் உளராற் பேணி
     அருகிய செல்வ ருள்ளும்
          பயனுளார் உளரென் றாய்ந்து
     பெரியவர் சொலுஞ்சொல் தேற்றும்
          பெரியநீர்க் கடலும் ஆங்காங்
     குரியவெண் மணற்சிற் றூறற்
          கேணியும் உரிய நீரால்.