பக்கம் எண் :

176 குசேலோபாக்கியானம்

   (சொ - ள்.) பெரிய நீர்கடலும் ஆங்கு ஆங்கு உரிய வெண்மணல் சிறு ஊறல்
கேணியும் - பெரிய நீர் நிறைந்த கடலும் அவ்வவ் விடங்களுக்குரிய வெண்ணிறமுள்ள
மணல்களிலுள்ள சிறிய ஊற்றுடைய நீர்நிலைகளும், உரிய நீரால் - தம்மிடத்துள்ள
நீரின் இயல்பால், பெருகிய செல்வருள்ளும் பயன்இலார் உளர் அருகிய செல்வருள்ளும்
பேணி பயன்உளார் உளர் என்று ஆய்ந்து - பெருக்கமான செல்வம் உள்ளவரிடத்தும்
(பிறர்க்குப்) பயன்படாதவர் இருக்கின்றார்கள், குறுகிய செல்வமுடையவரிடத்தும்
உதவிசெய்யக்கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஆராய்ந்து, பெரியவர் சொலும்
சொல்தேற்றும் - பெரியவர்கள் சொல்கின்ற சொல்லின் பொருளைத் தெளியச் செய்யும்.

   (வி - ம்.) கடலும் மணற்கேணிகளும் தேற்றும் என வினை முடிவு செய்க.
பெரியவர் சொல்லும் சொல்லாவது, பெருஞ்செல்வரிற் பயன்படாதவர் உளர் ; சிறுசெல்வரிற்
பயன்படுவோர் உளர் என்பது. அச் சொல்லின் பொருளைத் தெளிய எடுத்துக் காட்டுவது
கடலும் மணற்கேணியும் என்று கொள்க. "உவர்க் கடலன்ன செல்வருமுளரே,
கிணற்றூற்றன்ன நீயுமா ருளையே" என்ற கவியின் கருத்துங் காண்க.   (212)

     சிற்றிடை வலைச்சி மார்கள்
          தெருத்தொறுங் கூறி விற்கும்
     வற்றல்மீன் நாற்றம் போக்கும்
          அலர்மணிக் குழல்தா ழம்பூ
     பற்றுபு பரதர் கோட்டிற்
          பரப்புமீன் நாற்றம் போக்கும்
     மற்றவர் திணிதோள் வேய்ந்த
          நெய்தலங் கண்ணி மாதோ

   (சொ - ள்.) சிறு இடை வலைச்சிமார்கள் தெருதோறும் கூறி விற்கும் வற்றல் மீன்
நாற்றம் - சிறிய இடை அமைந்த வலைச்சியர்கள் தெருக்கள்தோறும் சென்று விலை
கூறி விற்கின்ற வற்றி உலர்ந்த மீன்களின் புலால் நாற்றத்தை, அவர் மணிகுழல் தாழம்பூ
போக்கும் - அவர்கள் நீலநிறம் பொருந்திய கூந்தலில் அணிந்திருக்கின்ற தாழம்பூ
போக்கிவிடும் ; பற்றுபு பரதர் கோட்டில் பாப்பும் மீன் நாற்றம் - பற்றிப் பரதவர்
கடற்கரையில் பரப்பிய ; மீனினது நாற்றத்தை, அவர் - அப்பரதவர், திணிதோள்
வேய்ந்த - வலிமை மிக்க தங்கள் தோள்களில் அணிந்துள்ள நெய்தல் அம் கண்ணி
போக்கும் - அழகிய நெய்தல் மாலை போக்கி விடும், மாது, ஓ : அசை.