பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்177


   (வி - ம்.) பரத்தியர் உலர்ந்த மீன்களை விற்பதற்குக் கூடையில் வைத்துத்
தலையில் சுமந்து செல்வர் எனவும், அப்போது தலையிற் சூடியுள்ள தாழம்பூவின்
மணம் அம் மீனாற்றத்தைப் போக்கும் எனவும், பரதவர் கடற்கரையில் உலர்த்துவதற்குப்
பரப்பிய மீன்களின் நாற்றத்தை அந்தப் பரதவர்கள் தோளிலணிந்துள்ள நெய்த்ல் மலர்
மாலையின் மணம் நீக்கும் எனவும் கண்டு கொள்க.                      (213)

     மருங்கிலாப் பரத்தி மார்கள்
          மடநடை கற்பான் வேண்டி
     ஒருங்குவந் தடைந்தாற் போல
          உயர்கரும் புன்னைச் சேக்கை
     அருங்குலப் பார்ப்பி னோடும்
          பெடையொடும் அன்னந் துஞ்சுங்
     கருங்கொடி அடம்பு சூழ்ந்த
          கைதையங் கானல் வேலி.

   (சொ - ள்.) கரு கொடி அடம்பு சூழ்ந்த கைதை அம் கானல் வேலி - அடம்பினது
கருமையாகிய கொடியால் சுற்றப்பட்டுள்ள தாழை மரங்கள் நிறைந்த அழகிய கடற்கரைச்
சோலையில், மருங்கு இலா பரத்திமார்கள் மடம் நடை கற்பான் வேண்டி-இடைகாண
முடியாத நெய்தல் நிலப் பெண்களின் அழகிய நடையைக் கற்றுக்கொள்ள, விரும்பி,
ஒருங்கு வந்து அடைந்தாற் போல உயர்கரும் புன்னை சேக்கை - ஒன்றாகக் கூடிவந்து
சேர்ந்தாற்போல உயர்ந்த கரிய புன்னை மலர்ப் பள்ளியில், அரும்குலம் பார்ப்பினோடும்
பெடையோடும் அன்னம் துஞ்சும் - அருமையாகிய சிறந்த குஞ்சுகளுடனும், பேடைகளுடனும்
அன்னப் பறவைகள் தங்கியிருக்கும்.

   (வி - ம்.) புன்னை மரங்களில் அன்னப் பறவைகள் கூட்டமாகத் தம் குஞ்சுகளுடன்
தங்கியிருக்குங் காட்சி நெய்தனி்ல மகளிர் நடையைக் கற்பதற்காக வந்து
காத்திருப்பதுபோலத் தோன்றும் என்பது, இடை கண்ணுக்குத் தோன்றாது என்பதை
விளக்க "மருங்கிலா" என்றார். இயற்கையாக வந்து தங்கியிருக்கும் அன்னங்களை
நடை கற்பதற்காக வந்தனவாகக் குறித்தலால் இது தற்குறிப் பேற்றவணி.   (214)

     தினைமுதல் வரகு முன்செஞ்
          சாலிமுன் விளைக்கும் மூன்று
     வனைபுகழ் நிலத்தார் நன்கு
          மழைவளம் வேண்டி நிற்பார்