பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்179


குசேலன், ஓர் புன்னை நீழல் சற்று இருந்து அயர்வு உயிர்த்தான் - ஒரு புன்னைமர
நிழலில் சிறிது காலம் தங்கியிருந்து இளைப்பாறினான்.

   (வி - ம்.) கண்விட்டு - கண்ணை விழித்து. இறும்பூது - வியப்பு, ஆச்சரியம்
சீரகம் - நீர்த்துளி. ஒவ்வ - ஏற்ப எனவும் பொருள் கூறலாம். தீய குணங்களில்
முதன்மையுடையது பொறாமை யாதலான் "ஒளவியம் அவித்த" என்றார். அழுக்காறு
நீக்கியவனை மற்றைத் தீயகுணங்கள் சேரா என்பது கருத்து.              (216)

     இக்கலம் உகைப்பார்க் குப்பொன்
          இம்மியும் ஈதற் கில்லேன்
     மிக்கவன் கேளா துய்ப்ப
          விரும்புறு சிறப்பும் இல்லேன்
     நக்கசெங் கமலக் கண்ணன்
          சேவைக்கு நடக்கி றேனென்(று)
     ஒக்கமெய் யுரைத்திட் டாலும்
          உண்மையென் றுள்ளங் கொள்ளான்.

   (சொ - ள்.) இ கலம் உகைப்பார்க்குப் பொன் இம்மியும் ஈதற்கு இ்ல்லேன் - இம்
மரக்கலத்தைச் செலுத்துகின்றவருக்குச் சிறிதளவு பொன்னும் கொடுப்பதற்கு இல்லாதவனா
இருக்கின்றேன், மிக்கவன் கேளாது உய்ப்ப விரும்புறு சிறப்பும் இல்லேன் - மேம்பட்டவன்
(காசு) கேளாமலே செலுத்துதற்கு விரும்பத்தக்க சிறப்பு யாதும் இல்லாதவனா
யிருக்கின்றேன், நக்க செம்கமலம் கண்ணன் சேவைக்கு நடக்கிறேன் என்று - மலர்ந்த
செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய கண்ணபிரானைக் கண்டுவரும்
பொருட்டுச் செல்கின்றேன் என்று, ஒக்க மெய் உரைத்திட்டாலும் உண்மை என்று
உள்ளம் கொள்ளான் - பொருந்தும்படி உண்மையைச் சொன்ன காலத்தும் அதனை
மெய்ம்மையென்று மனதில் ஏற்கமாட்டான் போலும் (என்று நினைத்தான் குசேலன்).

   (வி - ம்.) இம்மி - மத்தங்காய்ப் புல்லரிசி. சிறிய அளவுக்கு அஃது எடுத்துக்காட்டு.
"இம்மியரிசித் துணையானும் வைகலும்" என நாலடியாரிலும் " இம்மியன நுண்பொருள்க
ளீட்டி" எனச் சிந்தாமணிலும் வந்தன காண்க. சிறப்புடைய மனிதர் எனக் கண்டாற்
கூலி கேளாது கப்பலில் ஏற்றிச்செல்வான். அத்தகைய சிறப்பும் நம்மிடத்தில்லையே
என்றும் சிந்தித்தான். சிறப்பாவது ஆடை அணி முதலியவை.              (217)