பக்கம் எண் :

18 குசேலோபாக்கியானம்

     இருவருநற் குசேலமுனி சரித்திரத்தை
          யுலகுள்ளோர் இன்ப மெய்த
     ஒருவருமின் சுவைத்தமிழிற் பாடியரு
          ளுகவெனவுள் ளுவந்து கேட்பப்
     பொருவருசெஞ் சொற்சுவையும் பொருட்சுவையும்
          அணிநலமும் பொலிய ஆர்த்தி
     மருவருகாப் பியவுறுப்பும் வயங்கஉறும்
          ஈரைந்து வழுவும் வீட்டி.

   (சொ - ள்.) இருவரும் - மேற்கூறிய இருவரும் ; நல் குசேலமுனி சரித்திரத்தை
உலகு உள்ளோர் இன்பம் எய்த ஒருவு அரு இன்சுவை தமிழால் பாடி
அருளுக என உள் உவந்து கேட்ப - நல்ல குசேலரது வரலாற்றை
இவ்வுலகத்துள்ளார் மகிழும்படி நீ்ங்குதலில்லாத இனிய சுவையையுடைய தமிழ்ப்
பாவால் பாடியருளுகவென்று மகிழ்ந்து கேட்டலால் ; பொரு அரு செஞ்சொல்
சுவையும் பொருள் சுவையும் அணி நலமும் பொலிய - ஒப்பில்லாத
செஞ்சொற்களின் இனிமையும் அச்சொற்களின் பொருள் இனிமையும்
அணிகளின் நலமும் விளங்க; ஆர்த்தி மருவு அருகாப்பிய உறுப்பும் வயங்க -
யாவர்க்கும் விருப்பந்தருதலை உடைய அருமையான காவிய உறுப்புக்களும்
விளங்கும்படியாக ; உறு ஈர் ஐந்து வழுவும் வீட்டி - பொருந்தும் (குன்றக்
கூறல் முதலான) பத்துக் குற்றங்களும் (தோன்றாதவாறு) நீக்கி.

   (வி - ம்.) இது குளகம், பல செய்யுள் கூடி ஒரு வினை முடிவு கொள்வது
குளகம் ஆம். இக்கவியிலுள்ள வழுவும் வீட்டி என்ற வினையெச்சம், 4 ஆவது
கவியிலுள்ள "பாடி" மகிழ்ந்து அரங்கேற்றினன் என்ற வினைமுற்றைக் கொண்டு
முடிந்தமை காண்க. காவிய உறுப்புக்கள் ஆவன : வாழ்த்து, வணக்க முதலாகக்
கூறப்படும் காப்பியத்தின் உறுப்புக்கள். "பெருங்காப்பிய நிலை" என்ற தண்டி ஆசிரியர்
சூத்திரம் காண்க. குன்றக் கூறல் முதலாக நன்னூலிற் கூறப்பட்ட பத்துக் குற்றங்கள்
எனக் கொள்க. (18)

     இனிதமிர்தச் சுவையினுமிக் கஃதிதனின்
          சுவையதென இயற்றி னானால்,
     தனிதநிரை தவழ்மனைவல் லூர்வீராச்
          சாமியண்ணல் தந்த மைந்தன்,