பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்19


     கனிதருமம் நல்லொழுக்கங் குணமனைத்தும்
          ஓருருக்கொள் காட்சி போல்வான்
     புனிதமிகு கலையுணர்ச்சித் தேவரா
          சக்குரிசில் புலவ ரேறே.

   (சொ - ள்.) இதன் இன்சுவை இனிது அமிர்தம் சுவையினு மிக்கது என - இதன் இனிய சுவையானது இனியதாகிய அமுதத்தின் சுவையினும் மேன்மையுடையது என்னும்படி ; தனித நிரைதவழ் மனைவல்லுர் வீராச்சாமி அண்ணல் தந்த மைந்தன் - முழக்கத்தையுடைய மேகக் கூட்டங்கள் தவழ்கின்ற மாளிகைகள் நெருங்கின வல்லூரில் வாழ்கின்ற வீராச்சாமி என்னும் பெயரையுடைய பெரியோன் பெற்ற புதல்வனும்; கனி தருமம் நல் ஒழுக்கம் குணம் அனைத்தும் ஓர் உருகொள் காட்சி போல் வான்-மனக்கனிவுடன் புரியும் அறச்செயலும் உயர்ந்த ஒழுக்கமும் ஏனைய நற்குணங்கள் பலவும் ஒருங்கு கூடி ஒரு வடிவம் பெற்றாற் போலுந் தோற்றமுடையோனும் ; புனிதம் உறு கலை உணர்ச்சி தேவராச குரிசில் புலவர் ஏறு - துய்மையான நூலறிவினாலுயர்ந்த தேவராசன் என்னும் இயற்பெயர்கொண்ட பெரியோனுமாகிய புலவர் பெருமான் ; இயற்றினான்-இந்நூலினைப் பாடினான்.

   (வி - ம்.) நூலாசிரியர் பெயர் கூறுகின்றது இக்கவி. வல்லூர் என்ற வூரில் வாழ்ந்த வீராச்சாமி பெற்ற மைந்தன் தேவராசன் என்ற பெயருடையோனாற் செய்யப்பட்டது இது என்று உணர்க. தருமமும் நல்லொழுக்கமும் நற்பண்பும் ஆகிய எல்லாம் திரண்டு ஒரு வடிவமெடுத்து வந்தது போன்றவன் என அவன் பெருமை கூறப்பட்டது. தனிதம் நிரை - மேக வரிசை. தனிதம் - முழக்கம். இது முழக்கத்தையுடைய மேகத்திற்கு ஆகு பெயர். நிரை - வரிசை. மனைகள் மேக மண்டலம் வரையுயர்ந்து நிற்கும் ஊர் எனச் சிறப்புக் கூறினர்.
(19)

               எண்சீரடி ஆசிரிய விருத்தம்
     ஏராருஞ் சகாத்தமா யிரத்தெழுநூற் றெழுபத்
          திரண்டினிகழ் சௌமியநல் லாண்டுதனுத் திங்கள்
     வாராரு மிருபத்து நான்காநாள் பரிதி
          வாரமொன்பான் தி திசோதி சிங்கவிலக் கினத்திற்
     பேராருங் குசேலமுனி தனதுசரித் திரத்தைப்
          பெட்பினினி தருந்தமிழின் இயல்செறியப் பாடித்
     தாராரும் புயத்தேவ ராசவள்ள லான்றோர்
          தழைத் துவகை பூப்பஅரங் கேற்றினனுள் மகிழ்ந்தே.