|
(வி - ம்.) வளம்
பொருந்திய துவாரகையைக் கண்டவுடன் குசேலன் துன்பம்
நீங்கியது. கண்ணனைக் கண்டதுபோலக் களிப்புக் கொண்டு நடந்தான் என்றார்.
(224)
பரிக்கொ துங்கியும் பாய்தரு மும்மதக்
கரிக்குந் தேர்க்குமொ துங்கியுங் கார்க்குழல்
அரிக்கண் மாதர்க் கொதுங்கியும் ஆழ்வினை
பரிக்க லாதான் படருகின் றானரோ.
(சொ - ள்.) பரிக்கு ஒதுங்கியும் பாய் தரு மும்மதம் கரிக்கும்
தேர்க்கும் ஒதுங்கியும்-
குதிரைகளுக்க விலகியும், பாய்கின்ற மூவகை மதநீரையுடைய யானைக்கும், தேர்களுக்கும்
விலகியும், கார்குழல் அரிகண் மாதர்க்கு ஒதுங்கியும் - மேகம்போன்ற கருங் கூந்தலையும்
செவ்வரி படர்ந்த கண்களையுமுடைய பெண்டிர்க்கு விலகியும், ஆழ் வினை பரிக்கலாதான்
படருகின்றான் - ஆழ்ந்த கருமவினைகளைத் தாங்கமாட்டதவனாகிய குசேலன்
செல்லுகின்றான். அரோ: அசை.
(வி - ம்.) ஆழ்வினை பரிக்கலாதான் என்றது, இருவினைகளையும்
சுமந்து
வருந்தியிருக்கும் இயல்புடையவன் என்றும், அவ்வினைகளைச் சுமையாகக் கருதினவன்
என்றும், அவற்றை நீக்க முயல்பவன் எனவும், அது கருதியே கண்ணன்பாற் செல்பவன்
எனவும் குறிப்பாகக் கூறினராயிற்று.
(225)
முன்னும் பார்க்கும் முதிரொலி தோன்றலாற்
பின்னும் பார்க்கும் பெருநிலத் தூருயிர்
உன்னும் பார்க்கும் உறுவர் குழாமெலாம்
இன்னும் பார்க்க எழுதிடுஞ் சீர்த்தியான்.
(சொ - ள்) உறுவர் குழாம் எலாம் இன்னும் பார்க்க எழுதிடும்
சீர்த்தியான்-
முனிவர் கூட்டமெல்லாம் இன்னும் ஆராய்ந்து பார்க்கும்படி எழுதப்படும் பெரும்
புகழுடையவனாகிய குசேலன் முன்னும் பார்க்கும் முதிர் ஒலி தோன்றலால்-முன்னே
பார்த்துக் கொண்டே போவான் தேர் முதலியவற்றின் பேரோசை தோன்றுதலால், பின்னும்
பார்க்கும் - பின்னாலும் பார்ப்பான், பெரு நிலத்து ஊர் உயிர் உன்னும் பார்க்கும்-
பெரிய பூமியில் நகர்ந்து செல்லுகின்ற சிற்றுயிர்கள் தன் காலில் மிதிபடுமே என்று
நினைத்தும் (தரையையும்) பார்ப்பான்.
(வி - ம்.) உறுவர் - முனிவர். முதிர் ஒலி தோன்றலால் முன்னும்
பின்னும்
பார்க்கும் எனவும், பெருநிலத்து..... உன்னும் பார்க்கும் எனவும் கூட்டுக. உன்னும்
என்பது எச்சப் பொருள்
|