பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்187


     செப்பரும் அருநூல் மடந்தபு தேர்ச்சிச்
          செந்தமிழ்ப் புலவர்தந் தூக்கில்
     திப்பிய அணியும் பலபொருள் வாய்ப்புந்
          தெளிதரு நீர்மையுஞ் சீருந்
     தப்பிலா ழமுங்கொண் டலர்மணம் உடைத்தாய்ச்
          சாற்றுதோ றகலமுற் றெவரும்
     ஒப்பருங் குரைத்தென் றுரைத்திடப் பொலியும்
          உள்நகர் அகழியைக் கடந்தான்.

   (சொ - ள்.) செப்பு அரும் அருநூல் மடம்தபு தேர்ச்சி செந்தமிழ் புலவர் தம்
தூக்கின் திப்பிய அணியும் - சொல்வதற்கரிய அருமையான நூற்பயிற்சியால் அறியாமை
நீங்கிய தேர்ச்சியுடைய செந்தமிழ்ப் புலவர்களுடைய பாடல்போல் திவ்வியமான அணியும்,
பலபொருள் வாய்ப்பும் தெளிதரு நீர்மையும் சீரும் தப்பு இல் ஆழமும் கொண்டு -
பல பொருளின் கிடக்கையும் தெளிந் திருக்கின்ற தன்மையும் சீரும் தப்புதலில்லாத
ஆழமும் தன்னிடத்லில் பொருந்தி, அலர்மணம் உடைத்தாய் சாற்று தோறு அகலம்
உற்று எவரும் ஒப்பு அரும் குரைத்து என்று உரைத்திட பொலியும் உள்நகர் அகழியைக்
கடந்தான் - பரந்த மணமுடையதாய் சொல்லும்பொழுதெல்லாம் விரிவுடையதாய் யாவரும்
ஒப்புக்கூறுதல் அருமையுடையது என்று சொல்லும்படியாக விளங்குகின்ற உள்நகரிலுள்ள
அகழியை (நீர்க்கிடங்கை)க் கடந்துசென்றான்.

   (வி - ம்.) செந்தமிழ்ப் புலவர் இயற்றிய கவிகளைப்போல அணியும், பல பொருள்
வாய்ப்பும், தெளிதரு நீர்மையும் ஆழமும் பொருந்தி அலர்மணம் உடையதாய்
அகலமுடையதாய் இருந்தது அகழி என்க. அணி - அலங்காரம், அழகு. பலபொருள்
- அகப்பொருள், புறப்பொருள். தாமரை அல்லி முதலியவை. மீன் தவளை முதலிய
உயிர்ப் பொருள்கள். தெளிவு - பொருள் தெளிவாகத் தோன்றுவது. நீர் தெளிவாகத்
தோன்றுவது. பொருளாழம், நீர் ஆழம். அலர்மணம்-விரிந்த தமிழ் மணம், பூவின்
மணம். அகலம்-இடப்பரப்பு, பொருள் விரிவு என்று அகழிக்கும் கவிக்கும் ஏற்பப்
பொருள் முறையே கொள்க.
                                                         (230)

     படங்கிளர் அரவப் பாயுடைப் பகவன்
          பாரளந் திட்டநாள் வளர்ந்தாங்
     கிடங்கொள்விண் ணுலகம் போழ்ந்துமேல் வளரா
          எதிர்தரி யலருயிர் மடங்க