பக்கம் எண் :

190 குசேலோபாக்கியானம்

   (வி - ம்.) மள்ளர் - வீரர். வளி - காற்று. கொடிஞ்சி - தேர்மொட்டு. அரண்மனை
வாயிலில் குசேலன் செல்வதற்கு வழியில்லை ; அத்துணை நெருக்கமாகப்
போக்குவரத்திருந்தது என்று கூறினர். மள்ளர் - வீரர். வீரருக்கு ஒதுங்கினாற் குதிரை
வருகிறது ; குதிரைக்கு ஒதுங்கினால் யானை வருகிறது ; யானைக்கு விலகினால் தேர்
வருகிறது ; இடையறாது வரவும் போக்கும் இருக்கின்ற வாயில் ; இதில் குசேலன்
செல்லும் வகையறியாது மயங்கினன் என்க.                      (233)

     போதரும் இடங்கள் தொறுநெருக் குறலாற்
          பொன்வரை அனையதோள் மைந்தர்
     மேதகு மார்பத் திலங்குமா லைகளும்
          விரைகெழு கலவையும் இளமை
     மாதர்மெய்ப் பூசுங் குங்குமச் சேறும்
          மான்மதம் அளாவியைந் நூற்றுக்
     காதநா றிடுசெஞ் சந்தமுங் குசேலன்
          கந்தையும் நாறின மாதோ.

   (சொ - ள்.) போதரும் இடங்கள் தொறும் நெருக்கு உறலால் - போகின்ற
இடங்களில் எல்லாம் நெருக்கம் மிகுந்திருத்தலால், பொன் வரை அனைய தோள்
மைந்தர் மேதகு மார்பத்து இலங்கும் மாலைகளும் விரைகெழு கலவையும் பொன் -
மலையாகிய மேருவை நிகர்த்த தோள்களையுடைய இளைஞர் மார்புகளில் விளங்கும்
மாலைகளும் மணம் பொருந்திய கலவைச் சாந்துகளும், இளமை மாதர் மெய் பூசும்
குங்குமம் சேறும் மான்மதம் அளாவி ஐந்நூற்றுக் காதம் நாறிடும் செம்சந்தமும் -
இளம்பெண்கள் உடம்பி்ல் பூசியுள்ள குங்குமக் குழம்பும் கத்தூரியுடன் சேர்க்கப்பட்டு
ஐந்நூறு காததூரம் மணக்கின்ற செஞ்சந்தனமும் , குசேலன் கந்தையும் நாறின -
குசேலனது கந்தை உடையிலும் மணக்கலாயின. மாதோ ; அசை,

   (வி - ம்.) போகும் தெருக்களிற் குசேலன் நெருக்கப்பட்டு் அவன் கந்தையுடை,
மைந்தரும் மகளிரும் பூசிய மணப்பொருள்கள் தோய்ந்து மணங்கமழ்ந்தது என்றார்.
எனவே அந்நகரின் செல்வ மிகுதியும் தெருவின் சிறப்பும் தெரிந்தது.       (234)

     வெளிவரு வாரும் உட்புகு வாரும்
          வீதியிற் கலாம்விளைப் பாரும்
     அளிமலர் மாலை சாந்தமுன் கொடுபோய
          அலங்கரிப் பாருமுன் வாயில்