பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்195


     மணிகள்கால் யாத்த மாளிகை தோறும்
          மருவிய புலவிதீர் பாக்குப்
     பணிதரு மைந்தர் சென்னியில் புயத்தில்
          பதமெடுத் தோச்சிடும் மாதர்
     அணிகிளர் சிலம்பின் னொலியும்பின் எழுபொன்
          அவிர்தரு காஞ்சியின் ஒலியுங்
     குணில்பொரு முரசம் முதலிய மடங்கக்
          குமுறுதல் கேட்டுளே நகைத்தான்.

   (சொ - ள்.) கால்மணிகள் யாத்த மாளிகைதோறும் மருவிய புலவி தீர்பாக்கு
பணிதரு மைந்தர் சென்னியில் புயத்தில் பதம்எடுத்து ஒச்சிடும் மாதர் - அடிப்படையில்
மணிகள் பதிக்கப்பட்ட மாளிகைகள் எங்கும் பொருந்திய ஊடலை நீக்கும் பொருட்டு
வணங்கும் ஆடவரின் தலையிலும் தோளிலும் தங்கள் அடிகளை எடுத்து உதைக்கின்ற
பெண்டிர்களின், அணிகிளர் சிலம்பின் ஒலியும் பின்எழுபொன் அவிர்தரு காஞ்சியின்
ஒலியும் குணில்பொரு முரசம் முதலிய மடங்க குமுறுதல் கேட்டு உள்ளே நகைத்தான்
- அழகு விளங்குகின்ற சிலம்பின் ஓசையும் அதன்பின் உண்டாகின்ற காஞ்சியணியின்
ஒலியும் குறுந்தடியால் அடிக்கப் படுகின்ற முரசம் முதலியவற்றின் ஓசை மடங்கும்படி
முழங்கு தலைக் கேட்டுத் தனக்குள்ளே சிரித்தனன்.

   (வி - ம்.) குசேலமுனிவர் இல்லறத்தின் இயல்பு கண்டவர் ஆதலால்
அவ்வொலிக்குறிப்பை யறிந்தார். இவ்வொலி இரவில் எழுவதற்குக் காரணம் ஊடலாக
இருக்கும் என்றும், சிலம்பொலியும் காஞ்சிமணிக்கோவையின் ஒலியும் இருளில் எழுவதற்கு
வேறு காரணம் இல்லையென்றும், ஆய்ந்து நகைத்தார் என்பது. "மணிகள் கால்யாத்த"
செல்வச் சிறப்பை விளக்கிற்று. "புலவிதீர்பாக்குப் பணிதரும்" என்பது இன்பச் சிறப்பை
விளக்கியது. ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்" என்றார்
வள்ளுவரும். ஊடற் காலத்தில் ஆடவர் பணிதல் இயற்கை.             (241)

     வரைமிசை முளைத்த கழைநுனிக் கழன்ற
          மாசுண உரியசைந் தாற்போல்
     நிரைபடு மாடச் சிகைநடு பதாகை
          நெடுமரத் துகிலசை வதுவும்