பக்கம் எண் :

200 குசேலோபாக்கியானம்

காதணிகளும், மின்னல்செய் வாகுவலயமும் வாளும் வெயில் உற பரப்புதல் கண்டான்
- ஒளிவிடுகின்ற தோள்வளையும், வாட் படையும் ஒளிமிகப் பரப்புதலைக் கண்டான்.

   (வி - ம்.) மன்னருடைய குடை கொடி முதலியவை வெயிலை மறைத்து
இருளாக்குவதால் அவர்கள் அணிந்த மாணிக்கம் வயிர முதலியவற்றாற் செய்த
அணிகலங்கள் பேரொளி பரப்புவதுகண்டான் என்பது இருளில் ஒளிமிகுந்து தோன்றுவது
இயற்கை, ஒலியல்-துகிலாற் செய்த ஒருவகைத் தூக்கு.              (247)

     வெண்மையின் திகழ்ந்த மேனிலை மாட
          வியலுப ரிகையிடை இருந்து
     நுண்மையிற் புனையப் புகுந்தவோர் மைந்தன்
          நுவலருங் காமத்தால் மயங்கிப்
     பண்மையிற் பொலிந்தாள் வழக்கறுத் தமர்க்கும்
          படரரிக் கண்ணிதன் நுதலென்
     றண்மையிற் செறிந்த சிறுபிறை யிடைப்பொட்
          டணிந்துவெள் கிடுவது கண்டான்.

   (சொ - ள்.) வெண்மையில் திகழ்ந்த மேல்நிலை மாடம் வியல் உபரிகைஇடை
இருந்து - வெண்ணிறத்துடன் விளங்கின மேனிலை மாடங்களின் பெரிய
உபரிகையின்மீதிருந்து, நுண்மையில் புனைய புகுந்தஓர் மைந்தன் நுவல் வரும் காமத்தால்
மயங்கி - நுட்பமாக அலங்கரிக்கப்புகுந்த மிக்க இளைஞன் ஒருவன் சொல்லுதற்கரிய
ஆசையால் மயக்கமுற்று ; பண்மையில் பொலிந்தாள் வழக்கு அறுத்து அமர்க்கும்
படர்அரி கண்ணிநுதல் என்று - சிறப்போடு விளங்குகின்ற தன் காதலியின் ஊடலைத்
தீர்த்துப் போர்புரிகின்ற பரந்த செவ்வரிகளுடைய கண்கள் உடைய தன் காதலியின்
நெற்றியென்று, அண்மையில் செறிந்த சிறுபிறை இடை பொட்டு அணிந்து, வெள்கிடுவது
கண்டான் - பக்கத்தில் நெருங்கியிருந்த சிறிய இளமதிக்குப் பொட்டிட்டுப் பின்
நாணுவதைப் பார்த்தான்.

   (வி - ம்.) உபரிகை-உப்பரிகை. இது மேன்மாடத்திலுள்ள அறைகளை யுணர்த்தும்.
மேன்மாடத்தையும் உணர்த்தும். அமையும் அறிந்து பொருள்கொள்க. ஊடல் நீக்குதற்குத்
தன் காதலி நெற்றியிற் பொட்டிடச் சென்றவன் அண்மையில் இருந்த வெண்பிறைக்குப்
பொட்டிட்டு மீண்டுநோக்கி நாணினான். காதலால் மயங்கி விரைந்து செய்ததால் விளைந்த
பிழையிது என்று கொள்க. இது உயர்வு நவிற்சி.
                                                         (248)