பக்கம் எண் :

204 குசேலோபாக்கியானம்

     விரைகெழு வென்றிப் பெரும்புகழ் யாப்பின்
          மேவர இயைத்திடந் தோறுந்
     திரைசெறி கடல்சூ ழுலகினர் வியப்பத்
          தித்திக்கப் பாடுதல் கேட்டான்.

   (சொ - ள்.) தரைமிசைக் கொடுங்கோல் நடவிய கஞ்சன் சாளவனே சிசுபாலன் -
பூமியில் கொடு்ங்கோல் செலுத்திய கஞ்சனும், சாளவனும், சிசுபாலனும் ; வரைநிகர்
தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்தபோர் கண்ணன் - மலையை ஒத்த
தோள்வலியை யுடைய காலயவனனும் முதலாகிய பகைவர்களை அழிக்கும் போர்
வெற்றியை யுடைய கண்ணபுரானுடைய, விரைகெழு வெற்றி பெரும்புகழ் யாப்பின்
மேவர இயைத்து - விரைவுமிகுந்த வெற்றியாலாகிய பெரும் புகழைப் பாடல்களில்
பொருந்தும்படி அமைத்து, திரைசெறிகடல் சூழ் உலகினர் வியப்பத் தித்திக்கப் பாடுதல்
கேட்டான் - அலைநிறைந்த கடலால் சூழப்பட்ட உலகத்தார் வியக்கும்படி இனிமையாகப்
பாடுகின்ற பாடல்களைக் கேட்டான்.

   (வி - ம்.) கொடுங்கோல் - வளைந்த கொம்பு போன்றது என்று உவமையாகு
பெயராய் நெறிதவறிய அரசியலை யுணர்த்தியது. கஞ்சன், சாளவ்ன், சிசுபாலன்,
காலயவனன் இந்நால் வரும் கண்ணனாற் கொல்லப்பட்டவர். கஞ்சன் கண்ணனுக்குத்
தாய்மாமன். இவனைக் கொல்லவேண்டுமென்று பல சூழ்ச்சி செய்தான். அவ்வஞ்சகச்
செயல்கள் பயன்படாதது கண்டு தானே நேரில் எதிர்த்துப் போர்புரிந்து கண்ணனால்
கொல்லப்பட்டான். சாளுவன் சிசுபாலனுக்கு உயிர்த்தோழன். சிசுபாலன் மணஞ்செய்ய
விரும்பியிருந்த உருக்குமிணியைக் கண்ணன் கவர்ந்து செல்வது கண்டு அவனுடன்
போர் செய்து முதலில் தோற்றவன். பிறகு சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து
இரும்பு விமானம் பெற்றுவந்து துவாரகைபை முற்றுகையிட்டுப் போரில் இறந்தான்.
சிசுபாலன் இந்திரப்பிரத்தத்தில் கண்ணனுக்கு முதற்பூசை வழங்குவது தகாது என மறுத்துக்
கண்ணனையிகழ்ந்து கூறிப் போர்புரிந்து இறந்தான். காலயவனன் என்பவன் கண்ணனைக்
கொல்லக் கருதிப் பின்தொடர்ந்தபோது கண்ணன் மலைக்குகைக்குள் மறைந்தான்.
காலயவனன் கண்ணனை யறியாது ஆங்குத் துயின்ற முசுகுந்தனை எழுப்பி இறந்தான்.
"தன்னை யார்வந்து எழுப்பினும் அவர்கள் வெந்து சாம்பலாகப் போகுமாறு தேவர்களால்
வரம்பெற்று உறஙகியவன்" ஆதலால் எழுப்பிய காலயவனன் வெந்துபோனான். இவ்வாறு
கண்ணன் சூழ்ச்சியாற் கொல்லப்பட்டவன் இவன் என அறிக.
                                                               (253)