பக்கம் எண் :

206 குசேலோபாக்கியானம்

   (சொ - ள்.) மாந்தளிர் மேனி இலக்குமி மணாளன் மலர் தலைப் புவிவகுக்குறுங்கால்
தேம்தட மலரான் அணிநகர் இ மாதிரி கை செய் எனத் தெரிவிப்ப - மாவின் தளிர்போன்ற
மேனியுடைய திருமகள் தலைவனாகிய திருமால் பரந்த இடமுடைய பூமியைப்
படைக்கும்பொழுது தேன்பொருந்திய பெரிய தாமரை மலரில் தங்கியிருக்கின்றவனாகிய
நான்முகனிடத்தில் அழகிய நகரை இதுபோல் ஒழுங்காகச் செய்வாய் என்று சொல்ல,
சேந்த தன் நான்கு கரங்களால் சிருட்டி செயப்படு மாநகர் போலும் - சிறந்த தன்
நான்கு கைகளாலும் படைக்கப்பட்ட பெருமை பொருந்திய நகரம்போலும், வேந்தர்கள்
நெருங்கும் முரசு கண்படா இவியன் நகர் எனவும் உட்கொண்டான் - அரசர்கள்
நெருக்குதலைக் தெரிவிக்கும் முரசு ஒலிக்கப்படாத இப்பெரிய நகர் எனவும் கருதினான்.

   (வி - ம்.) இது போன்ற நகரம் எவராலும் படைக்க முடியாது; திருமாலே
படைத்ததுபோலத் தெரிகிறது. பிரமனாலும் இந்நகரைப் படைக்கவியலாது என்று கருதினன்
குசேலன் என்பது,                                                   (255)

     சிறந்தஅந் நகரின் வளத்திலிவ் வாறு
          சிறிதறிநி தற்புதம் உறலால்
     விறந்தபல் காத வழிநடந் ததனால்
          மேவிய வருத்தமும் இளைப்பும்
     பறந்தன பசியும் ஒழிந்தது நாவில்
          பைம்புனல் ஊறிய துறவும்
     அறந்தழை மனத்தான் உடலமுஞ் சிறிது
          தளிர்த்ததால் அதிசயம் பயப்ப.

   (சொ - ள்.) சிறந்த அ நகரின் வளத்தில் இ ஆறு சிறிது அறிந்து அற்புதம்
உறலால் - சிறந்த அந்நகரின் வளங்களில் சிறு பகுதியை இங்ஙனம் அறிந்து
வியப்படைதலால், விறந்தபல் காதம்வழி நடந்ததனால் மேவிய வருத்தமும் இளைப்பும்
பறந்தன - மிகுதியான பல காதமாகிய வழிநடந்து வந்ததால் ஏற்பட்ட வருத்தமும்
களைப்பும் பறந்துபோயின, பசியும் ஒழிந்தது நாவில் பைபுனல் ஊறியதுஉறவும் -
பசியும் நீங்கியது நாக்கில் குளிர்ந்த நீரும் மிகவும் சுரந்தது, அறம்தழை மனத்தான்
உடலமும் சிறிது தளிர்த்ததால் அதிசயம் பயப்ப - அறம் பெருகிய மனமுடையவனாகிய
குசேலன் உடம்பும் வியப்பு உண்டாகும்படி கொஞ்சம் குளிர்ந்தது.

   (வி - ம்.) அந்நகர்ச் சிறப்பைக் கண்டதனாற் பசி, களைப்பு நீர் வேட்கை நீங்கி
உடலம் குளிர்ந்தது என்பது.                                     (256)