பக்கம் எண் :

214 குசேலோபாக்கியானம்

பவளாகிய திருமகள் தங்கியிருக்கின்ற மார்பையுடைய திருமாலின் உயர்ந்த நல்ல
தொண்டினைச் செய்து நீங்கள் தூயவராயிருத்தலால்.
   (வி - ம்.) திருமால் தொண்டு புரிந்து தூயவராய் நீங்கள் இருப்பதால் உங்களைக்
கண்டபோது கண்ணனைக் கண்டது போலவே என்னுள்ளங் கருதி மகி்ழ்கின்றது
என்பது கருத்து, நோக்குதோறும் என்பதில் இடைவிடாமைப் பொருளில் "தோறும்"
என்ற இடைச்சொல் நின்றது.                                     (266)

               எழுசீரடி ஆசிரிய விருத்தம்
     எளியனேன் மறையோர் தங்குலத் துதித்தேன்
          என்பெயர் குசேலன்மிக் கொலிக்கும்
     நளிகொள்வெண் டரங்கப் பாற்கடல் நாப்பண்
          நாகணைத் துயிலொழிந் தடியார்க்
     களிசெய்தல் லார்க்கீ றுறுத்திட அவதா
          ரஞ்செய்த கண்ணபி ரானோ
     டிளமையிற் பற்பல் கலைபயின் றுள்ளேன்
          இசைக்குமுக் குற்றமும் அகல.

   (சொ - ள்.) எளியனேன் மறையோர் தம் குலத்து உதித்தேன் என் பெயர்
குசேலன் - ஏழையாகிய நான் வேதியர் குலத்தில் தோன்றியவன் குசேலன் என்பது
என் பெயர், மிக்கு ஒலிக்கும் நளிகொள் வெண்தரங்கம் பால் கடல் நாப்பண் நாக
அணை துயில் ஒழிந்து - மிகுந்து முழங்கும் குளிர்ந்த வெள்ளிய அலைகளையுடைய
திருப்பாற்கடல் நடுவில் பாம்புப் பள்ளியிலிருந்து தூக்கம் நீங்கி எழுந்து ; அடியார்க்கு
அளி செய்து அல்லார்க்கு ஈறு உறுத்திட அவதாரம் செய்த கண்ணபிரானோடு -
(தன்னை வணங்கும்) தொண்டர்கட்கு அருள் புரிந்து அன்பரல்லாதவர்க்கு இறுதியைக்
கொடுப்பதற்கு வந்து தோன்றிய கண்ணபிரானுடன் கூடி, இளமையில் இசைக்கும்
முக்குற்றமும் அகல பல்பல கலை பயின்றுள்ளேன் - இளம் பருவத்திற் சொல்லப்படும்
காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும் நீங்கும்படி பலவகையான கலைகளையும்
கற்றுள்ளேன்.

   (வி - ம்.) குசேலன் தன் வரலாறு காவலர்க்குக் கூறுகின்றான் ; மறையவர்
குலத்திற் பிறந்தவன் ; குசேலன் என் பெயர். கண்ணனோடு இளமையிற் கலை பயின்றவன்
என்று முதலிற் கூறினன். கண்ணனை நான் ஒரு மன்னனாக் கருதி வரவில்லை, அவனைத்
தெய்வமாகக் கருதியே வந்தேன் என்பது விளங்க "அவதாரஞ்செய்த கண்ணபிரான்"
என்றனன்.                                                      (267)