|
கத்துவெண்
டரங்கக் கடலைமீ கானாற்
கடந்துமண் கரைபட
ரொருவற்
செத்துமண் டியபல் நெருக்குடை வாயிற்
செழுங்கடல்
தன்னைநல் லருளே
பொத்துநெஞ் சகநும் மாற்கடந் தடியார்
பொருள்பெறும்
உததியங் கரையென்
றொத்துமா மறைகள் சொலப்படுங் கண்ண
னிடையடை தரவுளம்
நினைந்தேன்.
(சொ - ள்.) கத்துவெண் தரங்கம் கடலை மீகானால் கடந்து வெண்கரை
படர்
ஒருவன் செத்து - ஒலிக்கின்ற வெள்ளிய அலைகள் பொருந்திய கடலை மாலுமியால்
கடந்து வளப்பமிக்க கரையை அடையும் ஒருவனை ஒப்ப , மண்டிய பல் செருக்கு
உடைவாயில் செழுங்கடல் தன்னை நல் அருளே பொத்தும் நெஞ்சகம் நும்மால் கடந்து
- பல நெருக்கத்தைக் கொண்ட வாசலாகிய செழித்த கடலை நல்ல அருளே நிறைந்த
மனமுடைய உங்களால் கடந்து, அடியார் பொருள் பெறும் உத்தி அம்கரை என்று
ஒத்து மாமறைகள் சொலப்படும் கண்ணன் இடை அடைதர உளம் நினைந்தேன் -
அடியவர்கள் வேண்டுகின்ற பொருள்களை அடைதற்குரிய கடலின் அழகிய கரை
என்று பெரிய வேதங்கள் ஒற்றுமைப்பட்டுச் சொல்லப்படுகின்ற கண்ணனை அடைய
உள்ளத்தில் எண்ணினேன்.
(வி - ம்.) உங்களை மீகாமனாகவும் என்னைக் கடலைக் கடப்பவனாகவும்
அரண்மனையின் மக்கள் நெருக்கத்தைக் கடலாகவும், கண்ணனைக் கடற்கரையாகவும்
நான் கருதுகின்றேன். மக்கள் நெருக்கத்தைக் கடந்து கண்ணனைக் காணும்படியருள்
புரிவீர் என்று வேண்டினான் குசேலன் எனக் கொள்க. செத்து : உவமையுருபு. (268)
வச்சிரத் தடக்கை வாசவன் ஏவ
மஞ்சினம் பொழிந்தகல்
மழையை
நச்சும்விண் உரிஞ்சும் போகுயர் குவட்டோர்
நாகமேந் தித்தடுத்
தருளும்
அச்சுதன் பாற்சென் றேழையேன் வருகை
அறிவித்தென்
றனையவண் சேர்த்தல்
மெச்சுநுங் கடனென் றுரைத்தனன் எவரும்
விரும்புறு குசேலமா
தவனே.
|