பக்கம் எண் :

22 குசேலோபாக்கியானம்

   (வி - ம்) திருமால் பின் நிகழுஞ் செய்தியாகிய இச்செயலை முன்னரே
உணர்ந்துதான் மகிழ்ச்சியால் திசையெலாம் தாவும் பெரிய உருவங்கொண்டு உடல்
பூரித்தார் என்று கவிஞர் கற்பனை செய்தார். "மூவுலகு மிரண்டடியால் முறை நிரம்பாவகை
முடியத் தாவிய சேவடி" என்று சிலப்பதிகாரம் திருமால் திருவடியைச் சிறப்பிக்கின்றது.
அத் திருவடிகளமைந்த உருவத்தின் பெருமை தோன்ற 'திண்டோன் ககுபம் தாவ'
என்றார். ககுபம் - திசை, திக்கு. (22)

                    எழுசீரடி ஆசிரிய விருத்தம்
     அருமறை நான்கும் அன்புட னேத்த
          அரவணை தனில்விழி வளர்வோன்
     திருவருள் பெற்ற குசேலமா முனிதன்
          சீர்வளர் சரிதநன் குரைத்தான்
     பெருவள மோங்குந் தொண்டைநன் னாட்டிற்
          பிறங்கும்வல் லூரினில் வாழ்வோன்
     மருவளர் மாலைத் தேவரா சேந்த்ரன்
          வயங்குபல் கலையுணர்ந் தவனே.

   (சொ - ள்.) பெருவளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில்
வாழ்வோன் - பெருவளங்கள் பெருகியிராநின்ற தொண்டை நாட்டின் கண் விளங்கும்
வல்லூரில் வாழ்கின்றவனும்; வயங்கு பல்கலையுணர்ந்தவன் - உலகின்கண் விளங்கும்
பல கலைகளையும் உணர்ந்தவனுமாகிய; மருவளர் மாலை தேவராச இந்திரன் - மணந்
தங்கிய மலர்மாலை புனைந்த தேவராசனாகிய இந்திரன்; அருமறை நான்கும் அன்புடன்
ஏத்த அரவு அணை தனில்விழி வளர்வோன் திரு அருள் பெற்ற - அரிய வேதங்கள்
நான்கும் அன்போடு துதித்து வணங்கப் பாம்பாகிய அணையின் மேல் கண் துயில்
பொருந்துவோன் ஆகிய திருமாலின் திருவருளைப் பெற்ற: குசேலமா முனிவன் சீர்வளர்
சரிதம் நன்கு உரைத்தான் - குசேல முனிவன் என்னும் பெரியோனது சிறப்பு
வளர்கின்ற வரலாற்றை நன்முறையிற் கூறினான்.

   (வி - ம்) வல்லூர் என்பது தொண்டை நாட்டில் உள்ளது எனத்
தோன்றுகிறது. தேவராசன்+இந்திரன் - தேவராசேந்திரன் என
வடமொழியிலக்கணம் பெற்று நின்றது. இருபெயரொட்டு. அருமறை நான்கு
ஆவன:-இருக்கு, எசுர், சாமம், அதர்வணம். இக்கவி பாடிய புலவர் வேறு
எனத் தெரிகிறது, பாடியவர் பெயர் தோன்றவில்லை.