பக்கம் எண் :

222 குசேலோபாக்கியானம்

லுள்ள செல்வர்களிடத்தும் செல்வர் நட்பே விளங்கும்படி பொருந்தியிருக்கும்; ஏழை
நீர்மையர் நட்பு நில்லாது - வறுமைப் பட்டவரது நட்பு நிற்கமாட்டாது; அலகுஇல்
செல்வத்தன் ஆகி அரசர் யாவரும் தன்போற்ற - அளவில்லாத பொருள்
உடையவனாகி மன்னர்கள் யாவரும் தன்னைப் போற்றும்படி; மலர்தலை உலகம்
காக்கும் மன்னன்மாட்டு உன் நட்பு ஏற்று - பரந்த உலகத்தைக் காக்கின்ற
அரசனிடத்தில் உன் நட்பு எந்த அளவினை யுடையது?

   (வி - ம்.) நகரத்தினும் செல்வரைச் செல்வர் நட்பதேயன்றி வறிஞரைச்
செல்வர் நட்பது இன்று. நட்டாலும் நிலைத் திராது. உரகியல் இவ்வாறிருக்க
மன்னரின் உயர்ந்தவனாகிய கண்ணனிடம் உன் நட்பு இன்னும் நிலைத்திருக்குமா?
இராது என்றனர்.                                          (277)

     நிலத்திரு வேட்டு நாட்டும்
          நெடும்புகழ்த் தும்பை சூடி
     உலப்பெருந் திணிதோள் மாற்றார்
          உயிர்தப வுடற்றுங் காலை
     நலப்படுந் தந்தை மைந்தர்
          நந்துமுன் னோர்பின் னோர்தன்
     குலப்படும் மற்றோ ரேனுங்
          கொல்பவர் நட்பென் னாமால்.

   (சொ - ள்.) நிலம்திரு வேட்டு நாட்டு நெடும்புகழ் தும்பை சூடி - நிலமாகிய
செல்வத்தை விரும்பி நாட்டப்பெறுகின்ற நெடிய புகழை உடைய தும்பை
மாலையையணிந்து, உலம்பெரும் திணிதோள் மாற்றார் உயிர்தப உடற்றும் காலை -
திரண்ட கற் போன்ற பெரிய உறுதியான தோள்களை உடைய பகைவர்களின் உயிர்
நீங்கும்படி போர் செய்கின்ற காலத்தில், நலம்படும் தந்தை மைந்தர் நந்து முன்னோர்
பின்னோர் தன்குலம் படும் மற்றோர் ஏனும் கொல்பவர் நட்பு என் ஆம் - நன்மை
பொருந்திய தந்தையர் மக்கள் வளர்ச்சியுறும் மூத்தவர், இளையவர் தன்
குலத்திற்பிறந்தவர் எவராயிருப்பினும் கொல்வார் (மன்னவர்) அன்னவர் நட்பு என்ன
பயன்தரும்?

   (வி - ம்.) எதிர்த்த போரில் தந்தை, தமர், நண்பர்முதல் யாவர் வரினும்
அவரைக் கொன்று வென்றிகொள்ளக் கருது மன்னரிடம் நட்புரிமை நிலைக்குமா?
நில்லாது என்று கூறினர். கொல்பவர், நட்பினையும் கொல்வார் என்பது குறிப்பு (278)