பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்25


   (சொ - ள்,) இல்அறத்து இருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்த உள்துறவு
அடைகுசேலன் - மனையகத்திருந்து புரிவதாகிய அறநெறியில் ஒழுகியும் புளியம்பழத்தின்
இயைபு போல அகத்துறவடைந்து வாழ்ந்த குசேலரது ; நல்லதீ சரிதம் நாவலர் உள்ளம்
நனி மகிழ்தர தமிழ் பாவால் - நன்மையாகிய இனிமைமிக்க வரலாற்றை நாவன்மைமிக்க
புலவர்களின் மனம் மிகவும் மகிழும்படி தமிழ்ப் பாக்களால்; பல்லவம் சோலைசூழ்
வல்லூராளி - தளிர்களோடு கூடிய சோலைகள் சூழ்ந்த வல்லூரில் வாழ்வோன் ஆகிய;
பகர் அரு தேவராச பேர் -சொல்லுதற்கரிய தேவராசன் என்னும் பெயரினையுடைய;
வல்லவன் புரிந்த திறத்தை இற்று என்று வகுப்பவர் உலகினில் எவரே - கல்வியறிவால்
மேன்மையுற்றோன் இந் நூலினை ஆக்கிய முறைமையினை இத்தன்மையதென்று வகுத்துச்
சொல்லவல்லவர் உலகில் யாவருளர் (ஒருவருமிலர் என்பதாம்.)

   (வி - ம்.) இல்லறத்திருந்தும் மனைவிமக்கள் முதலிய சுற்றத்தார்பற்றும் உணவு
உடைக்குரிய பல்வகைப் பொருட்பற்றும் இலராய்த் திருமாலைப்போற்றும் ஒரு பற்றே
யுடையவராய் வாழ்வு நடத்தியது குறித்து புளிம்பழம் ஏய்ப்ப உள் துறவடை குசேலன்
என்றார். புளிம்பழம் வெளியே பார்ப்பவர்க்குத் தோடும் பழமும் இயைந்ததுபோலத்
தோன்றும். உடைத்துப் பார்த்தால் பழத்திற்கும் தோட்டிற்கும் பற்றில்லாதது தோன்றும்.
அது போலக் குசேலர் இல்லறத்தில் பற்றுடையவராகவே தோன்றினர், உள்ளே பற்றில்லாத
துறவியாக இருந்தார் என்பது கருத்து. அங்ஙனம் வாழ்தல் அரியது ஆதலால் அக்
கதையை "தீஞ்சரிதம்" என்றார். அச் சரிதங் கேட்க அறிஞர் மிகவும் விரும்புவர்
என்பது தோன்ற "நாவலர் உள்ளம் நனிமகிழ்தர" என்றார். தேவராசன் என்ற வல்லவன்
புரிந்த திறம் பிற புலவரால் இன்ன தன்மையுடையது என வகுத்துக் கூற இயலாது.
அவனே வகுத்துக் கூறினால் முடியும் என்பது கருத்து.                   (26)

பாயிரம் முற்றிற்று