பக்கம் எண் :

26 குசேலோபாக்கியானம்

                    க. குசேலர் மேல்கடலடைந்தது
                     அறுசீரடி ஆசிரிய விருத்தம்

     உலகெலாம் புகழ நாளும்
          உயர்மதிக் குலத்திற் றோன்றி
     அலகில்பல் லுயிரும் இன்பம்
          அடையவொண் குடைநி ழற்றி
     இலகுசெங் கோல்கைக் கொண்ட
          எழிற்பரீட் சித்து வேந்தே
     நலமுறிக் கதைகே ளென்று
          நற்றவச் சுகன்சொல் வானால்.

   (சொ - ள்.) நாளும் உலகு எலாம் புகழ - நாள்தோறும் உலகிலுள்ளார் புகழும்படி;
உயர்மதி குலத்தில் தோன்றி - மேன்மையுள்ள சந்திர குலத்தில் உதித்து ; அலகுஇல்
பல்உயிரும் இன்பம் அடைய ஒள்குடை நிழற்றி - அளவிறந்த பலவகையுயிர்களும்
களிப்படைய ஒட்பமாகிய குடையினால் நிழலைச் செய்து; இலகு செங்கோல் கை
கொண்ட - விளங்குகின்ற செவ்விய (நீதியாகிய) கோலைக் கையிலேந்திய ; எழில்
பரீட்சித்து வேந்தே - அழகுள்ள பரீட்சித்து என்னும் இயற் பெயருள்ள அரசே;
நலம்உறு இக்கதை கேள் என்று நல்தவசுகன் சொல்வான் - அறநெறிக்கு ஏற்றதாகிய
இவ் வரலாற்றைக் கேட்பாயாகவென்று நல்ல தவத்தாலுயர்ந்த சுகமுனிவன்
சொல்வானாயினன்.

   (வி - ம்.) சுகமுனிவர் பரீட்சித்து என்ற மன்னனுக்கு இக் கதையைக் கூறுகி்ன்றார்
என்று நூலாசிரியர் இக் கவியிற் கூறுகின்றார். பரீட்சித்து என்பவன் பஞ்சபாண்டவர்களில்
ஒருவனாகிய அருச்சுனன் பேரன், அபிமன்னனுக்கு மைந்தன். ஐவரும் வைகுந்தம்
செல்லும்போது இவனுக்கு முடிசூட்டுவித்துச் சென்றனர் என்று தெரிகிறது. இவனுக்கு
ஒருமுனிவர் சாபம் கொடுத்தபோது சுகமுனிவரை யழைத்து ஞானநூல் கேட்டனன்.
அப்போது கண்ணனுடைய கதையைக் கூறிய சுகமுனிவர் கிளைக் கதையாகிய இக்
குசேலர் கதையையும் கூறினர் என்று தெரிந்துகொள்க. இவன்குலம் சந்திரகுலம். நீதி
வழுவாது அரசு புரிந்தனன். பல்லுயிரும் இவன் ஆட்சியில் இன்பமுற்றன என்க. (1)