பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்27


     குத்தரங் குடிகொண் டாங்குக்
          கொழும்பொன்மா ளிகைக ளோங்கிச்
     சுத்தரங் களவி லார்கள்
          தொகுப்புற இன்பம் நல்கி
     இத்தரங் கஞ்சூழ் பூமிக்
          கெழில்முக மாகி யென்றும்
     உத்தர மதுரை யென்னும்
          ஒருநகர் விளங்கா நிற்கும்

(சொ - ள்.) உத்தரம் மதுரை என்னும் ஒருநகர் - வடமதுரை என்று பெயர்
கூறப்படும் ஒரு நகரமானது; குத்தரம் குடிகொண்டாங்கு கொழுபொன் மாளிகைகள்
ஓங்கி-மலைகள் குடி கொண்டிருந்தாற்போலச், செழுமையாகிய பொன்னால் செய்யப்
பெற்ற மனைகள் உயர்ந்து; அங்குஅளவு இலார்கள் சுத்தர் தொகுப்புற இன்பம் நல்கி
- அம் மனைகள் தோறும் அளவி்ல்லாதவர்களாய் நன்மக்கள் திரண்டுவாழ (அவர்கட்கு
இம்மை மறுமைக் கேதுவாகிய) வாழ்வின்பத்தினைக் கொடுத்து; தரங்கம் சூழ் இ பூமிக்கு
எழில்முகம் ஆகி என்றும் விளங்காநிற்கும் - கடலால் சூழப்பட்ட இந்தப் பூவுலகத்திற்கு
(நிலமகளுக்கு) அழகிய முகம் போல்வதாய் எந்நாளும் விளங்கி நிலைபெறும்.

(வி-ம்.) உத்தரம்-வடக்கு; வடமதுரையை உத்தரமதுரை என்றார். மலைகள் வந்து
குடிகொண்டதுபோல மாளிகைகள் தோன்றும். தூயவர்கள் கூடிவாழ இன்பம் நல்கும்;
பூமிக்கு அழகிய முகம்போலத் தோன்றும் என அந்நகரின் சிறப்புக் கூறப்பட்டது.
குத்தரம் - மலை. தரங்கம் - அலை. இது ஆகுபெயராய்க் கடலையுணர்த்தியது. இது
முத்திநகரங்கள் ஏழனுள் ஒன்று. அயோத்தி, அவந்தி, காசி, காஞ்சி, துவாரகை, மதுரை,
மாயை இவை முத்திநகர். குடிகொண்ட + ஆங்கு-இது அகரங்குறைந்து குடிகொண்டாங்கு
என நின்றது. ஆங்கு:உவமையுருபு. (2)

   அந்நெடு நகரின் பாங்கர் அந்நலா ரூடி நீத்த
   தந்நெடு மணிக்க லங்கள் தடமறு குற்று முற்றத்
   துன்னிய இருளை மேயத் துறக்கமென் றமரர் நாளும்
   மன்னிய இமைக்குஞ் சீர்த்தி மாநகர் அவந்தி யுண்டால்.

(சொ-ள்.) அ நெடு நகரின் பாங்கர் அநலார் ஊடி நீத்த த நெடுமணி கலங்கள்
- அந்தப் பெரிய பட்டினத்தின் பக்கங்களில் அழகிய மங்கையர்கள் (தம் கொழுநரோடு)
பிணங்கிக் களைந்து எறிந்த அவர்தம் விலையுயர்ந்த மணிகளிழைத்த