பக்கம் எண் :

32 குசேலோபாக்கியானம்

அம் மணம் கமழும் என்றும் காண்க. வாளைமீனின் உடலில் உள்ள புலால் நாற்றத்தையும்
மாற்றிக் கத்தூரி சாந்த மணம் கமழும்படி செய்யும் என்றதனாற் செல்வச் சிறப்புத்
தோன்றியது. உயர்வு சிறப்பணி இது.                                        (8)

                    கலிநிலைத்துறை
     புள்ள வாமலர்க் கணையினான் அன்னபொற் பினரும்
     எள்ள ரும்புக ழிரதியை ஏய்க்குமா தர்களும்
     உள்ள மிக்குவந் துடங்குகை கோத்தனர் சென்று
     வெள்ள நீர்துளைந் தாடுறூஉம் எழில்வள மேவும்.

   (சொ - ள்.) புள் அவாம் மலர் கணையினான் அன்னபொற் பினரும்-வண்டுகள்
(தேனுண்ண) விரும்புகின்ற மலராகிய அம்புகளைக்கொண்ட மன்மதனையொத்த
அழகுள்ள ஆடவரும்; எள்ளரும் புகழ் இரதியை ஏய்க்கும் மாதர்களும் - பழிப்பில்லாத
புகழினையுடைய இரதிதேவியை நிகர்க்கும் மங்கையர்களும்; உள்ளம் மிக்கு உவந்து
உடங்குகை சேர்த்தனர் சென்று - மனமிகக் களித்து அசைகின்ற கைகளைக் கோத்தனராய்ச்
சென்று; வெள்ளம் நீர் துளைந்து ஆடு உறூஉம் எழில் வளம் மேவும் - நீர்ப் பெருக்கில்
மூழ்கி விளையாடலைச் செய்யும் அழகின் மிகுதியைப் பொருந்தி இருக்கும் (அம்
மருதநிலம்.)

   (வி - ம்.) ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் உவமையாக மன்மதனையும் அவன்
மனைவி இரதியையும் கூறினர். வெள்ளம் வரும்போது நீர் விளையாடுவது மகிழ்ச்சியை
விளைவிக்கும் என்பதும், காதலனும் காதலியும் கைகோத்து நீர் விளையாடுவது மிக்க
மகி்ழ்ச்சியை விளைவிக்கும் என்பதும் அக்காலத் தியல்பு அது என்றும் அறிக.
கோத்தனர், சென்று கோத்தனர் என்பது எச்சப்பொருளைத் தந்தது. ஆடுறூஉம் : இன்னிசை
யளபெடை.                                                             9

               அறுசீரடி யாசிரிய விருத்தம்
     மேதினி முளைத்த ஆற்றால்
          விண்ணவர்த் தெறுபாக் குற்றங்
     கோதுவிற் பத்தி ரங்கொண்
          டுறுதளி ராற்சி வந்து
     தாதிவர் தண்பூங் கற்பத்
          தருக்குலம் விதிர்வி திர்ப்பத்
     தீதறு சுவர்க்க நாட்டைத்
          தினமுஞ்சென் றுரிஞ்சுஞ் சோலை.