|
றோர் எங்கு இருப்பினும் தாம் வேட்ட
யாவையும் துய்ப்பர் - நல் வினையால்
அமைந்த ஆகூழினையுடையோர் எவ்விடத் திருப்ப ரெனினும் தாம் விரும்பிய
எல்லாவற்றையும் (அவ்விடத்திருந்தே) நுகர்ந்தின்புறுவர்.
(வி - ம்.) புண்ணியஞ் செய்தவர் சுவர்க்கம் புகுவர் என்ற பழமொழிப்படி
தேவர் யாவரும் புண்ணியஞ் செய்தவர்களேயாவர். ஆதலால் அவர்களுக்கு
அவந்திநகர்ப் பூஞ்சோலையும் காய்கனி இளநீர் முதலியவற்றைக் கொண்டுபோய்க்
கொடுக்கின்றது. நல்வினை புரிந்து நல்லூழ் பெற்றவர் எங்கிருப்பினும்
இன்பந்துய்ப்பர் என்பது இதனால் விளங்குகின்றது என எடுத்துக் காட்டினர். இஃது
வேற்றுப்பொருள் வைப்பணி; எங்கிருப்பினும் நல்லூழ் உடையார் இன்பம் நுகர்வர்
என்ற பொதுப் பொருளால் விண்ணவரும் பூஞ்சோலைப் பயனை நுகர்ந்தனர் என்ற
சிறப்புப் பொருளை முடித்தலால். (11)
கலிநிலைத்துறை
வண்டர் பாண்செய மதுமலர் அசும்புபூம் பொழிலில்
வண்ட லாட்டயர் மகளிர்தம் வளம்பொதி கிளவி
வண்ட ளிர்ச்சினை மாங்குயில் பயிலுறும் மயிலவ்
வண்ட லர்ந்தகை யாருருச் சாயலை வௌவும்.
(சொ - ள்) வண்டர் பாண் செய மது மலர் அசும்புபூம் பொழிலில்
-
வண்டுகள் இசைப்பாட்டைப் பாடாநிற்ப, தேனை மலர்களினின்றும் துளிப்பிக்கும்
அழகிய சோலைகளில்; வண்டல் ஆட்டு அயர் மகளிர்தம் வளம் பொதி கிளவி -
மணற் சோறாக்கி விளையாடும் இளமகளிர் பேசும் செழுமையான இனிய
மொழிகளை; வண்தளிர் சினைமா குயில் பயில் உறும் - வளப்பமுடைய
தளிர்களோடு கூடிய கிளைகளையுடைய தேமாமரங்களில் இருக்கும் குயில்கள்
பழகா நிற்கும்; அ வண்டு அலர்ந்த கையார் உருசாயலை மயில் வௌவும் - அந்த
வளைகளணிந்த கைகளையுடைய மங்கையரின் வடிவத்தின் சாயலை மயில்கள்
கவரா நிற்கும்.
(வி - ம்.) வண்டு வண்டர் எனப் போலியாயிற்று. அந் நகர மங்கையரின்
இனிய மொழி குயிலோசையினும் இனிமை யுடையது. அவர்கள் சாயல் மயிலின்
சாயலிலும் சிறந்தது என்பது கருத்து. பூம்பொழில் - அழகிய சோலை. பூ-பொழில்.
பூ-அழகு. மலர் மது அசும்பு - பூவினின்று தேன் ஒழுகுகின்ற ; அசும்பு என்பது
பிறவினைப் பொருளில் நின்றது. குயில் மாமரங்களின் மிகுதியாகப் பயில்வதால்
மாங்குயில் என்றார். மங்கையர் மொழிகளின் இனிமையும் வடிவின் சாயலும்
கூறப்பட்டன. (12)
|