பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்373


3. குசேலர் வைகுந்தம் அடைந்தது
கடவுள் வணக்கம்
இன்னிசை வெண்பா


     ஒருதிடந் தான்கதிக்கண் உய்க்குமெனச் சொல்ப
     கருதிடந் தானவன் காமர் குலத்தான்
     பொருதிடந் தானவர் பொன்ற அமர்த்தான்
     மருதிடந் தானடிய வா.

   (சொ - ள்.) கருது இடம் தானவன் காமர் குலத்தான் - யாவரும் விரும்புதற்கிடமாகிய
மதி குலத்திலுதித்தவனும்; பொருதிடம் தானவர் பொன்ற அமர்த்தான் - போர் செய்தற்குரிய
மன வலியையுடைய அசுரர் மடிந்திடப் பொருதழித்தவனும்; மருது இடந்தான் அடி
அவா கதிகண் உய்க்கும் என சொல்ப ஒரு திடம் தான் - மருதமரம் பிளக்கும்படி
(ஊடே உரலுடன் தவழ்ந்து) சென்றவனும் ஆகிய கண்ணனெம்பிரானின் திருவடிகளில்
பொருந்திய அன்பானது நன்னெறிக்கண் செலுத்துமேன்று கூறுவர் (அக்கூற்று) ஒப்பற்ற
உறுதி மொழியாம்

   (வி - ம்,) தானவன் - சந்திரன், கண்ணன் பிறந்தது சந்திர குலம். திடம்+தானவர்
-திடத்தானவர் எனப் புணரவேண்டியது சந்தநோக்கி மெலிந்து நின்றது. அமர் என்ற
பெயர், வினைச்சொல்லாய் அமர்த்தான் என்று நின்றது. அமர்த்தான் - போர் புரிந்தான்.
இடந்தான் - ஒடித்தான். கண்ணனாய் ஆயர்பாடியில் வளரும்போது நளகூபரன் கூபரன்
என்ற இருவரும் வழியில் மருதமரமாக வந்து தன்னைக் கொல்லக் கருதி நிற்பதை
அறிந்து கட்டுப்பட்ட உரலுடன் தவழ்ந்து இழுத்துச் சென்று அம்மரங்களுக்கிடையில்
உருட்டி அவற்றைச் சாய்த்து அழித்தான் என்பது வரலாறு. அதனால் "மருதிடந்தான்"
என்றார். அடி அவா - அடியின் மீது வைக்கும் அவா என விரியும். அவா -
விருப்பம்; ஆசை. அவா கதிக்கண் உய்க்கும் எனச் சொல்ப - சொல்வார். இவ்
வினைமுற்றுக்கு எழுவாய் அறிஞர் என வருவிக்க.               (537)