பக்கம் எண் :

374 குசேலோபாக்கியானம்

வேற்றொலி வெண்டுறை


கருங்கடலின் நடுவணெழு கதிரெனக்கார்
     நிறத்துமணி கதிர்ப்பக் காமர்
பெருங்கனக வரையெனச்செம் பொனாடை
     நான்றபுயம் பிறங்கப் பாயல்
வென்றிவாள் அரவமுந் தொடரமென் றாமரைத்
துன்றுமா மங்கையுந் தொடரவாய் விட்டெழீஇ
மன்றவே தங்களுந் தொடரவான் சுவையமிர்
தொன்றுசெந் தமிழ்தொடர் ஒருவர்பின் தொடர்தரச்
சென்றவன் திருவடி தேருவார் யாருமே.

   (சொ - ள்.) கரு கடலின் நடுவண் எழு கதிர் என கார் நிறத்து மணி கதிர்ப்ப
- கரிய கடல் நடுவில் உதிக்கின்ற பகலவன் போலக் கரிய திருமார்பினிடத்துக்
கவுத்துவ மணியானது ஒளி செய்யவும்; காமர் பெரு கனகவரை என செம்பொன்
ஆடை நான்ற புயம் பிறங்க - அழகிய பெரிய பொன்மலைபோலச் செம்
பொன்னாடையானது தொங்கும்படி அணிந்துள்ள திருத்தோள் விளங்கவும்; பாயல்
வென்றிவாள் அரவமும் தொடர - படுக்கை யாகிய வெற்றியையுடைய ஒளிவுள்ள
ஆதிசேடனாகிய பாம்புந் தொடரவும்; மெல் தாமரை துன்று மா மங்கையும் தொடர
- மெல்லிய தாமரை மலரில் பொருந்திய திருமகளாகிய மங்கையுந்தொடரவும்;
வாய்விட்டு ஏழீஇ மன்ற வேதங்களும் தொடர - மிகுதியான வேதங்களும் எழுந்து
வாய்விட்டு முழங்கும் ஒலியோடு தொடரவும்; வான்சுவை அமர்து ஒன்று செந்தமிழ்
தொடர் ஒருவர் பின் தொடர்தர சென்றவன் - விண்ணுலகத்திலுள்ள தேவரமிதத்தின்
சுவைபோலு மினிமையைப் பொருந்தியுள்ள செந்தமிழின் தொடர்பினையுடைய
திருமழிசைப் பிரான் பின்னே (தமிழின் சுவையைக் கருதித்) தொடர்ந்து
சென்றவனாகிய திருமாலின்; திருவடி தேருவார் யாரும் - திருவடிகளை யாவரும்
விரும்பி நாடுவர்.

   (வி - ம்.) செந்தமிழ்தொடர் ஒருவர் என்றது திருமழிசைப் பிரானைக்
குறிக்கும், அவர் பின் தொடர்ந்தவர் திருமால் என்பது மேல்வந்த
சொற்றொடர்களால் விளங்கும் மணி, பொன்னாடை, பாயல் வென்றி வாளரவம்,
மாமங்கை, வேதங்கள் என்பன அவை. செந்தமிழ்ப் பின் தொடர்ந்தவர் ஆதலால்
தமிழ்ப் புலவர் யாவரும் அவன் திருவடியை நாடிப் பாடுவன் என்பது குறிப்பு.
கௌத்துவ