பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்375


மணி மார்பில் விளங்குவது கருங்கடல் நடுவே எழுந்த கதிர்போலத் தோன்றியது.
பொன்னாடை போர்த்தபுயம் பொன்மலை போலத் தோன்றிற்று. திருமால் பின்றொடர்ந்த
போது அவரை விட்டுப் பிரியாத பொருள்கள் எல்லாம் பின்றொடர்ந்து சென்றன
வெனக் கொள்க.                                                (538)

                    கலித்தாழிசை
காமர்நறு விரைத்துளபக் கண்ணியனைப் புண்ணியனை
மாமகள்தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள்
மாமகள்தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில்
தாமரைப் பெருமுதலுஞ் சாரற் கரியகதி சார்வீரே.

   (சொ - ள்.) காமர் நறுவிரை துளபம் கண்ணியனை புண்ணியனை மாமகள்
தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள் - அழகிய நல்ல மணங்கமழும்
துளசிமாலையை அணிந்தவனை அறத்தினுருவமானவனை திருமகள் கேள்வனை
மாந்தர்காள் துதித்தலைச் செய்மின் ; மாமகடன் கொழுநனை வழுத்துவீர் ஆம்
ஆயின் - தாமரை பெருமுதலும் சார்தற்கு அரியகதி சார்வீர் - திருமகள்
கேள்வனைத் துதிப்பீராயின் தாமரை மலரில் வாழ்கின்ற பெரிய முதல்வனாகிய
நான்முகனும் அடைதற்கரிய வீட்டின்பத்தை (நீவிர்) அடைந்தின்புறுவீர்.

   (வி - ம்.) தாமரைப் பெருமுதல் என்பது தாமரையில் வசிக்கும்
பிரமனையுணர்த்தும். பெருமுதல் என்றார் உலக முழுவதும் படைப்பதற்குரிய
பெரியமுதல்வன் என்பது கருதி பிரமனும் அடைதற்கரிய பதவி எனவே வைகுந்தம்
என்பது பொருள் - அதனினும் சிறந்தது வேறின்றாதலின். காமர் - அழகு. விரை -
மணம்.                                                      (539)

                     ஒருபொருண்மேல் மூன்றடுக்கிவந்த
                             வஞ்சித்தாழிசை

மாதர்களின் வருந்தாமே, போதமுறப் புரிந்திடுவீர்
சீதமலர்த் திருமார்பன், கோதறுசீர் குறிப்பீரே.
மங்கையரின் வருந்தாமே, பொங்கமுறப் புரிந்திடுவீர்
செங்கமலத் திருமார்பன், கொங்கலர்சீர் குறிப்பீரே.
வனிதையரின் வருந்தாமே, புனிதமுறப் புரிந்திடுவீர்
கனிமொழிச்செந் திருமார்பன், இனியசீர் குறிப்பீரே.