பக்கம் எண் :

380 குசேலோபாக்கியானம்

சீர்த்தி நிறம் கிளர் வெள்வேல் ஐயன் நிறைகுடி ஏற்றும் நாளில் பிறங்கிய துறக்க
நாட்டின் பெற்றி அந்நகரின் பெற்றி - அறநெறிக்குப் புறம்பான செயல்களையே
விரும்பியியற்றும் கொடிய சூரபன்மனை வருத்தி அவனுயிரை உடலினின்றும் பிரித்து
உறுதியாகிய தொழும்பு பூண்ட தேவர்களின் காலிலிட்ட விலங்கை நீக்கிப் புகழின்
நிறம்விளங்கும் வெள்ளிய வேற்படையையுடைய முருகக்கடவுள் நிறைவுறக் குடியேற்றிய
நாளில் விளங்கிய தேவருலகின் தன்மையை ஒப்ப விருந்தது ( குசேலனது ஊராகிய)
அந்த நகரம்.

   (வி - ம்.) வெள்வேல் ஐயன் - முருகன் சூரரைத் தொலைத்துத் தேவர் சிறை
மீட்டிவந்து பொன்னுலகத்தைப் புதுக்கித் தேவரைக் குடியேற்றிய போது அவ்வுலகம்
எவ்வாறு சிறந்து விளங்கியதோ அதுபோல விளங்கியது குசேலன் நகரம் என்பது.
அறன்கடை - பாவம். நயக்கும் - விரும்பும். பாவமே செய்ய விரும்பும் கொடிய
சூரர்என அவர் கொடுமை கூறப்பட்டது.                            (545)

          அருநிதி தவமென் றாராய்ந்
               தமைதர ஈட்டி யீட்டித்
          தருநிதி அனைய கண்ணன்
               றன்னருள் பெற்ற மேலோன்
          பெருநிதி நகரம் நோக்கிற்
               பிறங்கிய செல்வம் வாய்ந்த
          இருநிதிக் கிழவன் வாழ்க்கை
               யெழில்நகர் சிற்றூ ராமால்.

   (சொ - ள்.) அருநிதி தவம் என்று ஆராய்ந்து அமைதர ஈட்டி ஈட்டி தருநிதி
அனைய கண்ணன் தன் அருள் பெற்ற மேலோன் - அருமையாகிய செல்வமானது
தவமே யாமென்று ஆய்ந்தறிந்து (அதனை) நிரம்பத்தொகுத்துச் சேர்த்து வைத்துப்
(பின் பெறுமாறு போல) கண்ணபிரான் திருவருளைப் பெற்றுள்ள மேலோனாகிய
குசேலமுனிவனது; பெருநிதி நகரம் நோக்கில் பிறங்கிய செல்வம் வாய்ந்த இருநிதி
கிழவன் வாழ்க்கை எழில்நகர் சீறூர் ஆம் - பெருஞ் செல்வத்தாற் பொலிந்த நகரினைக்
காணுங்கால் விளங்குகின்ற (சங்கநிதி பதுமநிதியாகிய) இரு நிதிகளையுமுடைய குபேரனது
வாழ்விடமாகிய அழகிய நகரமானது சிற்றூரென்று மதிக்குந் தன்மையினதாம்.

   (வி - ம்.) குசேல முனிவன் நகரத்தை நோக்கியவர்கட்குக் குபேரன் வாழும்
அளகை நகரும் சிற்றூராகத் தோன்றும் என்