பக்கம் எண் :

384 குசேலோபாக்கியானம்

யடைந்தான் சூரியன் என்றார். இந்நகரத்து மாளிகைகள் இவ்வாறு ஓங்குதற்கு முன்
சூரியன் தன் தேர் ஒரு சக்கரமுடையது ஆதலால் எப்போது கவிழ்ந்துவிடுமோ என்று
கவலையுற்றிருந்தான் என்பது தெரிகிறது. எற்று என்பது எத்தன்மையுடையது எனப்
பொருள் தரும். இங்கு எது எனப் பொருடந்து நின்றது. ஐ சேர்ந்து எற்றை என
நின்றது.
                                                   (550)

     இந்திர நீல மேடை
          எழுங்கதிர்க் கற்றை மீப்போய்க்
     கந்தடு வெண்க ளிற்றைக்
          கருங்களி றாக்கல் நோக்கி
     முந்தைநாட் சாபம் மீட்டும்
          முளைத்தது கொல்லென் றஞ்சித்
     சிந்தையு ளாய்ந்து பின்னர்
          இதுவெனத் தெளியு மாலோ.

   (சொ - ள்.) இந்திர நீல மேடை எழும் கதிர் கற்றை மீ போய் கந்து அடு
வெண்களிற்றை கரு களிறு ஆக்கல் நோக்கி-இந்திர நீல மணியாற் செய்யப்பட்ட
மாடத்தினின்றும் எழுந்த ஒளிப் பிழம்பானது விண்ணுலகத்திற் சென்று (அங்கணுள்ள)
கட்டுத்தறியை முறிக்கின்ற வெள்ளை யானையைக் கரிய யானையாக நிறம் (வேறுபட)ச்
செய்கின்றவதனைக் கண்ணுற்று முன்னை நாளின் (துர்வாச முனிவனிட்ட) சாபமானது
மீண்டும் தோன்றிற்றோ வென்று பயந்து பின் மனத்தானாராய்ந்து இந்நகரத்துள்ள
(மாடங்களின்) ஒளியானாகியதா மென்று (அவ்வெள்ளை யானை) தன்னுள்ளே
தெளிவடையும்.

   (வி - ம்.) விண்ணுலகத்திலிருக்கும் வெள்ளை யானைகளின் வடிவம்
இந்நகரில் இந்திர நீலக் கற்களால் அமைந்த மேடையின் நீல நிற வொளியாற் கறுப்பானது.
அவ்வியானை கண்டு முன்னை வந்த சாபம் இந்நாளும் வந்ததோ என்று கருதிப் பின்
இவ்வொளிதான் என்றறிந்தது என்றார். துருவாசன் முன்னொரு காலத்தில் வெள்ளை
யானையைக் காட்டானையாகக் கடவது எனச் சபித்த வரலாற்றைக் கொண்டு இவ்வாறு
கூறினார். திருவிளையாடலில் வெள்ளையானைச் சாபந் தீர்த்த படலத்தில் இவ் வரலாறு
காண்க.
                                                              (551)