பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்517


கொண்டவுனது மனம்போல, அவர்கள் மனங்களுந் துறவினையுடையதாமோ ; மருவி
நின் சார்ந்தோர் துன்பிந் வயங்குதல் அழகிதாமோ - பொருந்திய உன்னோடு சேர்ந்துள்ள
அவர்கள் துன்பத்திடையுழலுதல் நன்றாமோ ; பொருவு இலா முனிவர் ஏறே அஃது
எண்ணி புந்தி மாழ்கேல் - ஒப்பில்லாத துறவிகளுக்குத் தலைவனே! அதை நினைத்து
மனம் வருந்தாதொழிக,

   (வி - ம்.) திருவம் - செல்வம். நிமித்தம் - காரணம் ; ஒருவும் - நீங்கும். உன்
உள்ளம் போல உன் மனைவிமக்கள் உள்ளமும் உலகிற் செல்வத்தையும் அதனால்
வரும் பயனையும் விழையாமல் இல்லை. அவர்கட்காகவே இச்செல்வம் கொடுத்தது;
உன் குடும்பம் துன்பத்தில் உழலுதல் நன்றோ என்றான் கண்ணன்.        (735)

          மெய்ப்பொரு ளுணர்ந்த தூயோர்
               மேவியெங் குறைவ ரேனும்
          பொய்ப்பொருள் பற்று வாரோ
               பொய்ப்பொரு ளேனும் வந்து
          கைப்படப் பற்றுங் கொல்லோ
               அவரையஃ தசத்துக் கண்டாய்
          வைப்பென நமது பூசை
               வாஞ்சித்து வயங்கு மேலோய்.

   (சொ - ள்.) நமது பூசை வைப்பு என வாஞ்சித்து வயங்கும் மேலோய் -
நம்மைப் பூசித்தலே பெருநிதியா மென்று விரும்பி, அங்ஙனம் ஒழுகுகின்ற மேலோனே!.
மெய்பொருள் உணர்ந்த தூயோர் மேவி எங்கு உறைவர் ஏனும் பொய் பொருள்
பற்றுவாரோ - உண்மைப் பொருளையறிந்த சான்றோர் எவ்விடத்திற் பொருந்தி
வாழ்வரெனின், பொய்யாகிய பொருள்களில் புலன் போக்குவார்களோ, அவரை பொய்
பொருள் ஏனும் வந்து கை பட பற்றும் கொல்லோ அஃது அசத்து கண்டாய் -
அத்தூயோர்களை (அந்தப்) பொய்ப் பொருள்கள் தாமும் வந்து கையகப்படப்
பற்றவல்லனவோ, (அவை) அறிவில்லனவாதலால் (பற்ற மாட்டா.)

   (வி - ம்.) வைப்பு - புதையல் ; சேமநிதி. பொய்ப் பொருளை மேலோருள்ளம்
பற்றுமோ? அவருள்ளத்தைப் பொய்ப் பொருள் வந்து பற்றுமோ? இரண்டு செயலும்
நிகழாச் செயல் என்று விளக்கினன் கண்ணன். ஒளியும் இருளைப் பற்றாது ; இருளும்
ஒளியைப் பற்றாது. இவை மேலவற்றுக் கொப்பாகும்.                     (736)