பசுக்கள்
தம் கன்றுக்கு ஊட்டியபின் தானே வழியும் பாலின் மிகுதிநோக்கி
"எஞ்சிய தீம்பால் வெள்ளம்" என்றார். மடியினின்று தானேவடியும் பால் மழைபோல
இடைவிடாது விழும் என்பது தோன்ற "பெய்யும்" என்றும், அவ்வாறு பெய்த பால்
வெள்ளம் காடுகளில் நிறைந்து சேறாகிக் காடுகள் முழுவதும் வயல்களாகத் தோன்றும்
என்ற கருத்துப் புலப்பட " கான வைப்பு மருத வைப்பாக" என்றும் கூறினர். தளர்வறு
செருத்தல் என்றாவது தளர்வறும் ஆக்கள் என்றாவது கூட்டுக. செருத்தல் - மடி. பசுக்
கூட்டங்களின் இடையிலும் பின்னும் முன்னும் சென்று அவற்றை மேய்த்துக் காத்தான்
என்பது தோன்ற ஆக்கள் குரச் செந்தூள் குஞ்சியடைந்து சேப்பப் புரந்தோன் என்றார்.
செந்தூள் எழுந்து குஞ்சியைச் சிவப்பித்தது என்று அறிக. (7)
எழு சீரடி ஆசிரிய
விருத்தம்
இமைத்தலில் வி்ண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப
இலங்குறும் இளநல
எழிலார்
அமைத்தட மென்றோள் ஆய்ச்சியர் விழியாம்
அம்புயத் தேமலர்
மலரச்
சமைத்தபூண் மார்பன் தேவகி யீன்ற
தனயன்போ ரேற்றவன்
மல்லைக்
குமைத்தருள் கண்ணன் பேசருஞ் சீர்இக்
குரைகடல் உலகில்வா
ழியவே.
(சொ - ள்.) இமைத்தல் இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும்
இளநல எழில் ஆர் அமைதட மெல்தோள் ஆய்ச்சியர் - கண் இமைத்தல் இல்லாத
தேவர் (உலக) மங்கையர் நாணும்படி விளங்குகின்ற இளமையும் நல்ல அழகும் பொருந்திய
மூங்கில் போலும் நீண்ட மெல்லிய தோள்களையுடைய இடைக்குல மகளிரது; விழியாம்
அம்புயம் தேமலர் மலர சமைத்த பூண் மார்பன் - கண்களாகிய மணமுள்ள தாமரை
மலர்கள் (நோக்கலால்) விரியத் தொழிலமைந்த அணிகள் புனைந்த திருமார்பை
உடையவனும்; தேவகிஎன்ற தனயன் - தேவகிப் பிராட்டி பெற்ற புதல்வனும்; போர்
ஏற்ற வல்மல்லை குமைத்து அருள் கண்ணன் - போரி்ல் எதிர்த்த வலிய மல்லரை
அழித்தவனும் (ஆகிய கண்ணபிரானது); பேசு அரு சீர் இக்குரைகடல் உலகின் வாழிய-
சொல்வதற்கு அரிதாகிய புகழ் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் வாழ்க.
|
|
|
|