பக்கம் எண் :

பக்கம் எண் :68

விக்கிரம சோழனுலா

பேரிளம்பெண்
 


 

646



650
நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும்
கண்டதுங் கெட்டேன் கனவை நனவாகக்
கொண்டதும் அம்மதுச்செய் கோலமே - பண்டுலகிற்
செய்த தவஞ் சிறிதும் இல்லாத தீவினையேற்
கெய்த வருமே இவனென்று - கைதொழுது
தேறி ஒருகாலுந் தேறாப் பெருமையால்
ஏறி இரண்டா வதுமயங்கி - மாறிலாத்
தோழியர் தோள்மேல் அயர்ந்தாளத் தோழியரும்




 

வரிகள் 646 - 653 : தேமொழியும்..........தோண்மேலயர்ந்தாள்

சொற்பொருள் : தேன்போலும் இனிய மொழியுடையவள் அப்பேரிளம்பெண் பவனி கண்டவுடன் நான் கெட்டேன்; கனவை நனவாக நான் மனத்திற்கொண்டதும் அக்கட்குடி மயக்கங்காட்டிய வேறுபாடேயாகும். முற்பிறப்பில் இவ்வுலகத்தில் தவஞ்சிறிதுஞ் செய்யாத பாவியாகிய என்பால் இம்மன்னன் அணைய வருவனோ? (வாரான்) என்று கைகுவித்து வணங்கி, ஒருகாலும் தெளிந்து, பின் இரண்டாமுறையும் மனந்தெளியாத பெருகிய மையல் மனத்துள் அடைய அதனால் மயங்கி மனவேறுபாடு இல்லாத தோழியர் தோளின்மேற் சோர்ந்து விழுந்தாள்.

விளக்கம் : கெட்டேன் - இரக்கக்குறிப்பை யுணர்த்தியது கனவுதான் கண்டனன்; அக்கனவை நனவாக்கியது கட்குடித்த மயக்கம்தாள் என்று உண்மையுணர்ந்தாள். தான் பிழை செய்ததை நினைத்து மனமிரங்கினாள். அவ்விரக்கக்குறிப்புத் தோன்ற ‘கெட்டேன்' என்றாள். துகில் புடைபெயர்ந்தது; தோள் நெகிழ்ந்தது; பூமாலை சரிந்தது; சந்தனக்கோலம் அழிந்தது; செவ்வாய் விளர்த்தது. கருங்கண் சிவந்தது; நெற்றியில் வெயர்வை யரும்பியது ஆகிய வேறுபாடுகள் யாவும் கட்குடியால் விளைந்தனவே என்று ஆய்ந்தாள். அதனால் அம்மதுச் செய் கோலமே என்றாள். ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது. ‘இத்தகைய மன்னனைக் காதலனாகப் பெறுவதற்கு எத்தனை தவஞ் செய்திருக்கவேண்டும். அத்தனை தவஞ்செய்திருந்தாலன்றோ அவனாற் காதலிக்கப்படுவன் யான்? அதற்குரிய குடிப் பிறப்பும் தனிச்சிறப்பும் பெருவனப்பும் என்பாலுள்ளனவோ? இல்லையே! எவ்வாறு அவன் என்னைக் காதலித்து என்பால வந்தணைவன்? கனவிற்கண்ட பொருள் கைக்குக் கிடைக்குமோ? எனப் பலவாறு நினைத்து வருந்தினள் என்பது தோன்ற, ‘தீவினையேற் கெய்த வருமே யிவன்' என்றார். இவன் என்று சுட்டியது யானைமேற் பவனிவரும் இத்தகைய சிறப்புடைய மன்னன் என்பதை விளக்கியது. ஒருகாலும், இரண்டாவதும் இவற்றிலுள்ள உம்மைகள் எதிரதுதழுவிய எச்சமும், இறந்தது தழுவிய எச்சமுமாய் நின்றன. இரண்டாவது தோன்றிய மையல் தெளியக் கூடாத மையல் என்பதை விளக்க, தேறாப் பெரு மையல்' என்றார்.