வரிகள் 653 - 664 : அத்தோழியரும்.........சிகாமணியேநம்ப சொற்பொருள் : அப்பாங்கியரும் எழுமுழமுயர்ந்த அப் பட்டத்து யானையின் எதிரே விரைந்து சென்று நின்று (அம்மன்னனை நோக்கி) சக்கரத்தை யுடைவனே! மாளிகைகளையுடைய காவிரிப்பூம்பட்டினத்திற்கும் கருவூர்க்கும் காஞ்சிநகருக்கும் மதுரைக்கும் உறையூர்க்கும் வேந்தனே! பாடும் புலவர்கள் சார்ந்திருக்கும் ஆணைச்சக்கரத்தை நடாத்தி, ஒப்பற்ற ஏழ்புவனத்தையும் காக்கும் சூரியனே! தளர்வில்லாமற் காத்து ஒரு குடையால் எட்டுத்திசையையும் கவித்து நிழலைச்செய்த மன்னர் குலமலையில் உயர்ந்த மேருவே! போர்புரியும் தொழிலால் மற்றுள்ள ஏழு கலிங்க நாட்டினையும் வென்று கைப்பற்றிய படைகளையுடைய தியாக சமுத்திரமே! இவ்வுலகில் ஏழு தீவிலுள்ள வட்டத்திற் பெரும்போர் புரிந்த பகையரசர்களுடைய தங்க மணிமுடியின்மேல் தங்கும் மணியே! இறைவனே! விளக்கம் : தோழியர் பலர் சென்று தம் தலைவி காமமயக்கத்தைக் குறிப்பாக உணர்த்துதல் வேண்டி, அரசன் இவ்வாறு விளித்தனர் எனக் கொள்க. அரசன் செவி சாய்த்துக் கேட்டு ஆராய்ந்து அவளை யணையவருவான் என்ற நோக்கத்தோடு விளித்தன்று. தந்தலைவி மயக்கங் கண்டு வருந்திச் செய்வதறியாது திகைத்துப் புலம்பியதாகக் கொள்க. கருவூர், சேரன் தலைநகரம், காஞ்சி, தொண்டைநாட்டுத் தலைநகரம், கூடல், பாண்டிய நாட்டுத் தலைநகர் இவற்றிற்கும் மன்னன் என்றது. அந்நாட்டு மன்னர் யாவரையும் வென்று தனக்குத் திறை கொடுக்கும்படி அடிப்படுத்தியது குறித்தது. ஆழியாய் என்றது திருமாலே என விளித்ததாம். காக்குந் தொழிலாற் காவலர் திருமாலுக்கு ஒப்பாவார் என்ற கருத்து. பகலவன் - சூரியன். பகலவனே என்றது சூரியன் குலமுதல்வ னாதலால் அவன் போன்றவனே என விளித்ததாகக் கொள்க. பாடலர் - புலவர். பாடலர்சாரும் ஓரேழுபார் எனக் கூட்டுக. பாடு அலர் எனப் பிரித்துப் பாடும் புகழ் எனப் பொருள் கொள்ளலும் ஒன்று. "ஒரு குடையால் எட்டுத் திசை கவித்த" என மன்னன் அரிய செயல் கூறப்பட்டது. கவித்தல் - மூடுதல், நிழல் செய்தல். இஃது அரசு புரிந்ததை யுணர்த்தியது. உன் அரசு எட்டுத் திசையிலுள்ளாரையும் இன்பமடையும்படி செய்தது என்பது கருத்து. மலைகளில் உயர்ந்தது மேரு. அதுபோல மன்னர் குலத்துள் உயர்ந்தவன் நீ என்ற பொருள் தோன்ற "வேத்துக் குலகிரியின் மேருவே" என்றார். வேத்துக்குலம்+கிரி - மன்னர் குலமாகிய மலை. உலகில் மலைகள் சிறியனவும் பெரியனவுமாகப் பல காணப்படுகின்றன. அவற்றைப்போலவே மண்ணாளு மன்னர்கள் சிற்றரசரும் பேரரசருமாகப் பலர் இருக்கின்றனர். மேருமலையொத்த வேறுமலை எங்குமில்லாதது போல உன்னையொத்தவரசர் பிறர் எங்குமிலர் எனச் சோழனைச் சிறப்பித்தது இதுவெனக் காண்க. வேத்துக்குலகிரி உருவகவணி. கலிங்கம் ஏழு பிரிவுடையது ஆதலால் ‘கலிங்கங்கள் ஏழனையும்' என்றார். இவ்வாறே மற்றை நூல்களும் கூறுவதை நோக்குக. கலிங்கத்தை வென்றவன் சோழனல்லன்; அம்மன்னவன் படைத்தலைவனே என்பது தோன்றும்படி ‘போய்க் கொண்ட தானை' என்றார். தியாக சமுத்திரம் என்பது பட்டப் பெயர், தானை - சேனை. தானைத் தியாக சமுத்திரம் - சேனைகளையுடைய விக்கிரமசோழன். எழுப்பொழில் வட்டம் - ஏழு தீவினும் உள்ள வட்டமாகிய புவி. இம்பர் - இம்மண்ணுலகம் சிகாமணி - முடிமணி. முடியிலணியும் மணி போன்றவன் என்பது பொருள் மவுலி - கிரீடம். |