வரிகள் 664 - 672 : நின்பாரிற் படுவன..............புயல்வளவ! சொற்பொருள் : ‘நினது நாட்டில் உணர்வன பல மணிகளும் நின் கடனீரிற் பிறந்தன சில முத்துகளும், நின் நேரியாகிய மலையிடத்துள்ளனவும், நினக்குரிய பிற மலையிடத்துள்ளனவும் ஆகிய வைரங்களும். மன்னனே! நின் சோழ நாட்டில் உள்ள எழில் நிறைந்த பூத்தொழிலையுடைய துகில்களும் நின்னை வந்து இவள் பணிந்தவுடன் கொள்ளை கொண்டாய். அன்றியும் இவள் கொங்கையிற் படர்ந்த செழித்த தேமலும், நீங்காத நிறையும் மாந்தளிர் போன்ற சாயலும், பழைமையான துயிலும் நீ கவர்ந்தது நின் பழைமையான குலத்திற்றோன்றிய முன்னோர் பழகிய சிறந்த மனுநூலின் முறையாகுமோ? மேகம்போன்ற கொடையிற் சிறந்த சோழனே! (கூறுவாய்) என்றார். விளக்கம் : நின் நாட்டில் உண்டாவன சில மணிகள் என்பது ஒன்பதுவகை மணிகளில் பின் கூறப்படும் முத்தும் வைரமும் ஒழிந்த ஏழினையும் உணர்த்தும். "மரகதம் பவளம் நீலம் வச்சிரம் பதும ராகம், விரவிய தரள மேகோ மேதகம் புருடராகம், உரவிய காந்தி விட்டே யுமிழ்வயி டூரியம்தான், பெருகிய நவமணிக்கும் பெயர் கண்டு கொள்க. மணிகள் பதித்த அணிகளைப் ‘பன்மணியும்' என்றார். நித்திலமும், முத்துமாலையும், வைரமும், வைரம்பதித்த அணிகளும், கொண்டாய் - கவர்ந்து கொண்டாய். பேரிளம்பெண்ணாகிய இவள் நின்னை வந்து கண்டு வணங்கினால் அவளுக்கு வேண்டும் பொருள்களைக் கொடுத்து மனமகிழ்ச்சி யூட்டி இன்பமுறுவித்து விடுப்பதன்றோ மனுகுலவேந்து வள்ளலாகிய உனக்குப் பெருமையாகும். அவன்பாலிருந்த மணியும் அணியும் துகிலும் பிறவும் கவர்ந்தது பெருமையாமோ? நின் பாரில் நின் கடல் நீரில் நின் வெற்பில் நின் காட்டில் தோன்றிய பொருள்கள் என ஆய்ந்து அவற்றைக் கவர்ந்து கொண்டா யெனினும் இவள் கொங்கைச் சுணங்கும், நிறையும், தளிர் நிறமும் துயிலுங் கவர்ந்தது மனுநூல் விதிக்குப் பொருந்துமோ? கூறுக என வினவினார். அத்தோழியர் என்க. புயல்வளவ! என்ற விளி இப்பெயருனக்குப் பொருத்தமில்லையே என்று கூறுவதுபோல இறுதியில் நிற்கின்றது. இவன் நின் பவனி கண்டு பணிந்தாள்; நின்மேற் காதல் கொண்டாய்; உடல் மெலிந்தாள்; உடை நெகிழ்ந்தது; மணிகள் பதித்த பலவணிகளும் கழன்று வீழ்ந்தன; முத்துமாலையும் பூமாலையும் அவ்வாறே கழன்றன; கொங்கையிற் சுணங்கு மறைந்து பசலை பூத்தது நிறையழிந்தது; சாயலும்போய்; உடல் பசலையாயிற்று; இனித் துயிலும் நீங்கும் இவ்வாறு காதலித்து நிற்கும் இவளைக் கண்ணாலும் பாராது நீ செல்வது முறையாகுமோ? காதல்கொண்ட காரிகையாரைக் கலந்தணைவது மன்னர் குலத்திற்குத் தக்கதன்றோ? இவள் உயிர் நீங்கின் அப்பழி உன்னைத்தானே சாரும்? என்று கூறுவார் போல இருந்தது அவர் கூற்று. நேரிய - நேரியினிடத்துள்ள. நின்வெற்பில் - நினக்குரிய மலையில். நேரிய வயிரம் எனவும், வெற்பில் வயிரம் எனவும் தனித்தனி கூட்டுக. நிறை - மனத்தைத் தீயவழியிற் செல்லாது நிறுத்தும் பண்பு. ஆடவர்க்கும் இக்குணம் உரியது எனக் கூறுவர் புலவர். |