பக்கம் எண் :

பக்கம் எண் :71

விக்கிரம சோழனுலா

தலைவனை முன்னிலையாக்கிக் கூறல்
 


 

673






680



684
மன்னிய தொண்டை வளநாடு வாளியும்
பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னித்
திருநாடு தேருங் குறையறுப்பச் செய்தால்
திருநாண் மடமகளிர் தம்மை - ஒரு நாளவ்
வேனற் கரசன் விடுமே அவன்சினமிப்
பானற்க ணல்லாள் உயிர்ப்பரமே - ஆனக்காற்
குன்றே எனத்தகுநின் கோபுரத்தில் தூங்குமணி
ஒன்றே உலகுக் கொழியுமே - என்றினைய
கூறி வணங்கிடும் இவ்வளவுங் கோதைமேற்
சீறி அனங்கன் சிலைவளைப்ப - மாறழியக்
குத்துங் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி
உத்துங்க துங்கன் உலா.




 

வரிகள் 673 - 684 : மன்னிய.........உத்துங்கதுங்க னுலா

சொற்பொருள் : நிலைபெற்ற வளமுள்ள தொண்டைநாடு (காமனுக்கு) அம்புகளையும், காவிரி வளம்பொருந்திய சோழநாடு அழகிய விற்களையும், குமரித்துறையுடைய பாண்டியநாடு தேர்களையும் (அவன்) குறை நீங்கும்படி செய்தால் அக்காமன் நாணத்தையுடைய இளமங்கையரை ஒரு நாளேனும் (போர் புரிந்து வருந்தாது) விடுவனோ? (விடான்). அவன்சினம் இந்த நீலமலர் போன்ற விழியுடைய இப்பேரிளம்பெண்ணின் உயிர்ப் பாரமேயாம். (இவள் நன்னிலைமை) ஆனால் மலையேயிது வென்று கூறத்தகுந்த கோயில் வாயிலிற்றூங்குமணி ஒன்றே நிலை பெற்றதாம். உலகத்தில் இது நீங்குமோ (எப்போதும் நீங்காது) என்று இத்தன்மையான சொற்களைக் கூறி வணங்குமளவு வரையும் அம்மங்கையர்மீது சினந்து மதன் வில்லை வளைக்கப் பகைவரைத் தொலைப்பதற்குக் கொம்பாற்குத்தும் மதயானை மேல் உயர்ந்தோர்க்கெல்லாம் உயர்ந்தவனாகிய கொடைத் தன்மையுடைய சோழன் உலா வந்தான்.

விளக்கம் : காமனுக்கு அம்புகள் மலர்கள். தாமரை, முல்லை, அசோகு, நீலம், மாம்பூ இவையைந்து. ‘தொண்டை நாடு சான்றோருடைத்து' எனக் கூறியபடி ஆங்குக் கோயில் வழிபாடு செய்யும் சான்றோர் பலர் நந்தவனம் வைத்து வளர்த்து மலர்கள் மிகுதியாக உண்டாக்கப்படுவது குறித்து ‘தொண்டை நாடு வாளியும்' என்றார். சோழநாட்டுழவர் வயல்களிற் கரும்பு விரும்பி நட்டு வளர்ப்பது குறித்து "பொன்னி நாடு பூஞ்சிலையும்" என்றார். பொதியமலையிலிருந்து தென்றற்காற்று வருவதால் "கன்னித்திருநாடு தேரும்" என்றார். காமனுக்கு அம்புமலர்; வில்கரும்பு; தேர் தென்றற் காற்று என்பதும் தெரிக. தொண்டை நாடு அவனுக்கு குறை நீங்கும்படி அம்புகளைக் கொடுக்கின்றது. சோழனாடு வில்லைக் கொடுக்கின்றது: பாண்டி நாடு தேரைக் கொடுக்கின்றது அம்பும் வில்லும் தேரும் அவனுக்குக் குறைவின்றிக் கிடைக்கின்றன. இம்மூன்று நாடுகளும் இவ்வாறு குறையறுப்பச் செய்தால் அவன் போர் புரியாமல் விடுவானோ? ஒருநாளாயினும் விடமாட்டான். அவை மூன்றும் நினக்குரியவைதாம். அவ்வாறு செய்யாமல் தடுத்து நிறுத்தினால் எமது துன்பம் நீங்கும். அதுவும் நீ செய்கின்றிலை யென்பது குறிப்பு. இப்போது அப் பேரிளம்பெண்ணின் உயிர்ப் பாரத்தைக் காமன் சினம் தாங்கியிருக்கிறது. காமன் சினம் தாங்கவில்லை யெனின் உயிர் போய்விடும். சினமோங்கினால் உயிர் நீங்கும்; சினம் நீங்கினால் உயிர் வரும். இந்நிலையில் இவள் இருக்கின்றாள் என்பது குறிப்பு.
ஆனக்கால் (இந்நிலை நீங்கி உடல் நலம்) ஆனால். தூங்குமணி ஒன்றே என்றே எழுவாய்க்குப் பயனிலையாக, ‘சிறந்தது; ஒப்பற்றது நீதியுடையது; நிலைபெற்றது' என்பவற்றுள் ஒன்று கொள்க. இவட்கு இடையூறு நீங்கினால் அம்மணி அடிக்கப்படாமல் இருக்கும். அதனால் அது சிறந்ததாம் என்க. ஒழியுமே, இதில் ஏகாரம் வினாப்பொருளில் வந்தது. ஒழியுமோ? அம்மனி ஒழியாது என்ற பொருளைத் தந்தது. இவள் துன்பத்தை நீக்கி இன்பம் பெறச்செய்வது நின் கடமையாம் எனக் குறிப்பித்தவாறு இது. ஆனக்கால் என்பதற்கு, இவள் உயிர் கெடும் நிலைமையானால் எனப் பொருள் கொள்ளின் தூங்குமணியொன்றே இதுகாறும் இடையூறின்றி நெறிமுறையின் நின்றது; இனி இதுவும் நீங்கிவிடும் என்று கூறியதாகக் கொள்க. இப்பொருட்கு ஏ அசையாம். வணங்கிய மங்கையர்க்கெல்லாம் காதலுண்டாயிற்று என்பார், "வணங்கு மளவு மனங்கன் சிலை வளைப்ப" என்றார். போந்தான் - வந்தான். உலா போந்தான் எனக் கூட்டுக.