வரிகள் 1 - 10 : தேர்மேவும் பாய்புரவிப் .............வுடனிருந்தோன் சொற்பொருள் : தேரிற் பொருந்திய தாவிச் செல்லும் குதிரைகளின் (பசிய ஒளியாலும் தன் சிவந்த ஒளியாலும்) பச்சை இலைகளையுடைய செந்தாமரை மலர் (அலைகளின்) போர் பொருந்திய பாற்கடலில் பூத்தது போன்ற தோற்றமுடைய சூரியனும், உலகத்தில் யாவரும் மயங்கும்படி ஒரு பசுவின் மனக்கலக்கமாகிய துன்பம் நீங்கும் பொருட்டு ஒரு மைந்தன் மேல் உருண்ட சிறந்த தேரையுடைய மனவலிமை உடையவனும், தன்னருளால் வானோரால் அழிக்க முடியாத அகரப் பெரும்பகையை நீக்குவதற்காக மற்றை வேந்தர் செலுத்தாத வச்சிரப்படையுடைய காளையை வாகனமாகச் செலுத்தியவனும், சோர்வு வராமல் உறக்கத்தை நீக்கி அரம்பையர் சோருங் காதணிகளைச் சோராமற் காத்துத் தேவர் நகரத்துக் கோட்டையைக்காத்த சக்கரப்படையையுடைய மன்னனும் ஒளியைக் காட்டும் அவ்விந்திரனுக்குரிய மணிகள் பதித்த ஆசனத்தில் அவன் மனம் பொருந்தாமற் புகழ அவனுடனமர்ந்திருந்த அரசனும். தேர்மேவும் என்ற சீர் பத்துப் பொருத்தங்களும் அமைந்தது. இதன் விளக்கம் ஆராய்ச்சியுரையிற் காண்க. விளக்கம் : சூரியன் புரவிகள் பச்சை நிறமுடையன எனவும், ஏழு புரவிகள் எனவும் கூறுவதால் அப் புரவிகளின் பச்சை நிறத்தினாலும் அவனுடைய சிவந்த ஒளியாலும் பசிய இலைகளின் நடுவே மலர்ந்த செந்தாமரைப் பூவை யொத்திருந்தான் சூரியன் எனக் கொள்க. "பச்சைமா, ஏழு மேறப்போயாறு மேறினார்" (கம்ப. கையடை. 22). புரவியால் என மூன்றனுருபு விரித்துப் பொருந்துக. புரவி ஆகுபெயராய் அவற்றின் ஒளியை யுணர்த்தியது. பூத்தது அனையோன் - பூத்தனையோன் எனத் தகர வுயிர்மெய் மறைந்தது; இது செய்யுள் விகாரம். கடலில் அலை எப்போதும் ஒன்றோடொன்று போர் புரிவதால், போர் ‘மேவும் பாற்கடல்', என்றார். ‘கார்மேல் மருள' என்றது. "கன்றின் பொருட்டுத் தன் ஒருமைந்தனைக் கொல்கின்றானே இம்மன்னன் ஐயோ பாவம்" என்று கண்டோர் மயங்க என்ற கருத்தினை யுட்கொண்டது. "உருளும் திருத்தேர் உரவுரவோன்" என்பது பசுவின் துயர் நீங்க உருண்ட தேர் எனவும் அச் சிறப்புடைய தேரினைத் தனக்குரிமையாகக் கொண்ட வலிமையுடையோன் எனவும் பொருள்பட்டு ஒரு மைந்தனைத் தேர்க்காலிற்கிடத்திக் கொன்ற மன வலிமையுடையவனைக் குறிப்பாக உணர்த்தியது. அவன் மனுவேந்தன் எனக் கொள்க. ஆதிமனு இவன் என்று இராசராச னுலாவும், கலிங்கத்துப் பரணியும் கூறுகின்றன. சேக்கிழார் பெரியபுராணம் ஆதிமனு வழிவந்த வேறொரு மனு வேந்தன் எனக் கூறுகின்றது. "அவ்வருக்கன்மக னாகிமனு மேதினி புரந்தரிய காதலனை யாவினது கன்று நிகரென், றெவ்வ ருக்கமும் வியப்பமுறை செய்தகதை" (கலிங். இராச. 10) ‘ஏழ்புரவி, பூட்டுந்தனியாழிப் பொற்றேரோன் - ஓட்டி, அறவாழிமைந்தன் மேலூர்ந்தோன்" (இராசராச. வரி - 3, 4). இந் நூல்களில் "அருக்கன் மைந்தன் எனவும்" ஏழ்புரவி.......தேரோன்.......ஊர்ந்தோன் எனவும் முறையே கூறியிருப்பது ஆதிமனு என்பதை நன்கு விளக்கும். விக்கிரமசோழனுலாவினும் சூரியனையடுத்து மனுவைக் கூறி இருப்பதும் அதனை வலியுறுத்தும். குலிசம் - வச்சிரம். அதனை யுடைய விடை எனவே இந்திரனாகிய காளை என்று கூறப்பட்டது. இந்திரன் தேவருலகத்திற்கு வந்து அசுரப்பகையைத் தொலைக்க வேண்டும் என்று வேண்ட: அவன் வேண்டு கோட்கிணங்கி ஆங்குச் சென்று போர் புரிந்து அசுரரைக் கொன்றான் என்பதும், போர் புரியும்போது அவனுக்கு வாகனமாக இந்திரன் விடையுருவங் கொண்டு நின்று தாங்கினன் என்பதும் அவன் பெயர் ககுத்தச் சக்கரவர்த்தி என்பதும் புரஞ்சயன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு என்பதும் பல நூல்களால் அறியலாம். "இக்கு வாகுவின்ம கன்புதல்வ னான வுரவோ னிகலு வோனிகலு ரஞ்செய்து புரந்த ரனெனுஞ் சக்கு வாயிரமு டைக்களிறு வாக னமெனத் தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும்" (கலிங்கத். இராசபா. 11) | "இவர் குலத்தோர், தோன்றலைப்பண் டிந்திரன்காண் விடையேறாய்ச் சுமந்தானும்" (கம்பரா. குலமுறை. 3) "வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய, இந்திரனை யேறாக்கி யேறினோன்" (இராச.......உலா வரி 19, 20.) "போகபுவி புரந்த பூபதியும்" (விக்கி........உலா. வரி 12) என இவன் கூறப்படுகின்றான். பேராப் பெரும்பகை என்பது தேவர்க்கும் அசுரர்க்கும் தீராப் பகை என்பதை விளக்கியது. "பிறவேந்தர் ஊராக் குலிசவிடை யூர்ந்தோன்" என்றது இந்நாட்டிலுள்ள சிறந்த சக்கரவர்த்திகளில் இந்திரனைக் காளை வாகனமாக்கி அதன்மேல் ஏறிச்செலுத்தியவர் எக்காலத்தினும் எவருமிலர், இவன் ஒருவனே இந்திரனை வாகனமாகக் கொண்டவன் என்பதை யுணர்த்திற்று. "எயில்காத்த நேமியிறையோன்" முசுகுந்தன். முசுகுந்தச் சக்கரவர்த்தியிடம் இந்திரன் வந்து எங்கள் நகரத்தை முருகக் கடவுள் வந்து சூரரைத் தொலைக்கும் அளவும் காத்துக்கொள்ளவேண்டும் என்று வேண்ட, அவ்வாறே சென்று பகலும் இரவும் துயிலாது காத்தான் எனவும், பின்னர் அச் சோர்வு நீங்க நீண்டகாலம் உறங்கும் வரத்தைத் தேவர் பாற் பெற்றனன் எனவும் தெரிகிறது. "இவர் குலத்தோன் விற்பிடித்த அறமென்ன வொருதனியே திரிந்தமரா பதிகாத்தோன்" (கம்ப. குலமுறை 6.) முசுகுந்தன் இமையோர்புரம் மடங்கலும் அரண்செய்து புரந்த புகழும் (கலிங்கத் - இரா-12) என வருவன காண்க. சோர் குழை என்பது சோரும் நிலைமையில் இருந்த குழை எனப் பொருள் தந்தது. அதனைக்காத்து - அக் குழைகளைச் சோராது காத்து; எனவே வானவர் மனைவியராகிய அரம்பையர், தங்கணவ ரனைவரும் பகைவரால் இறந்து படுவர் எனவும், காதணி களைந்து கைம்மை நிலையடைவோம் நாம் எனவும் மனங்கலங்கிய காலத்தில் எயில் காத்து வானவர் பகைவரால் அழியாமற்காத்து அவ்வரம்பையர் காதணி களைந்து கைம்மை நிலை யெய்தாதவாறு செய்தவன் என விளங்கிற்று. மங்கலவணி களைவது போன்றது காதணி களைவதும். காதலர் இறந்தபோது மங்கலவணி களையும்போதே காதணியையும் களைவர் காரிகையர் என்பது தோன்றும். "நாந் தேவரென்பார் தம்பாவை யர்க் கன்று காதோலை பாலித்த தயவாளர்" (மதுரைக்கலம். 29) எனக் குமரகுருபரர் கூறுவதுங் காண்க. இந்திரனுடன் ஓராசனத்தில் இருந்தவன் திலீபன். இவன் வரலாறு வேறு நூல்களிற் காண்கிலம். டாக்டர் உ. வே. சா. குறிப்புரையில் கண்டதுதான். இதில் ஒருவர் பின் ஒருவராகச் சோழகுல மன்னர் தோன்றி யரசு புரிந்த வரலாறு கூறப்படுகிறது. ஆதியிற் சூரியனும் அவன் பின் மனுவேந்தனும் அவனுக்குப் பின் ககுத்தனும், அவனுக்குப் பின் முசுகுந்தனும் அவனுப்பின் திலீபனும் அரசு புரிந்தனர் என வழிமுறை காண்க. வரி 54இல் "பெரியோனிவன் பின்பு" என வந்ததை ஒவ்வொரு மன்னற்கும் கூட்டிக் கொள்க. சூரியனும் இவன் பின்பு மனுவும் இவன் பின்பு ககுத்தனும் என முறையே கூட்டுக. |