வரிகள் 10 - 20 : கேவ்வை எழ் .............சரத்தோன் சொற்பொருள் : பேரொலி யெழப் பேசும் பெரிய வாயுடைய கரிய இயமனுக்குத் தக்கவாறு வழக்குப் பேசிய நீதி மன்னனும், பழக்கத்துடன் வந்த புலியுடனே புல்வாயும் ஒரு நீர்த்துறையில் நீர் பருகுமாறு ஆணை செலுத்தி உலகத்தையாண்ட மன்னர் பெருமானும், சுடுகின்ற தீயில் வெந்து சாம்பரான அறுபதினாயிரம் சகரர்களும் உயிர்பெற்று உடலோ டெழுந்து விண்ணுலகு சென்று தங்குமாறு கங்கையாற்றைக் கொண்டு வந்த வேந்தனும், முன் வந்து போர் புரியும் பத்துத் தேர்களில் வந்த பத்தசுரர்களுடைய போரினை முற்காலத்தில் ஒரு தேரிற் சென்று பொருது வென்று வந்த வலிமையுடையவனும், பத்து மலையையும் துளைத்துச் செல்லும் இடியைப் போல இராவணன் பத்துத்தலைகளையும் தொலைக்க வேண்டும் என்று நினைத்து ஏவி அறுத்த அம்பினையுடையவனும். விளக்கம் : கூற்றுக் கேற்ப வழக்குரைத்தவன் பெருநற் கிள்ளிவளவன்; "கூற்றுக்குத் தேற வழக்குரைத்த செம்பியன்", (விக். உலா. வ. 14) எனவும், ‘காலனுக்கிது வழக்கென வுரைத்தவவனும்" (கலிங். இரா. 15) எனவும் வருவன காண்க. வளவனுக்கும் கூற்றுக்கும் என்ன வழக்கு நடந்தது என்பதை அறியப் போதிய சான்றில்லை. புலியும் புல்வாயும் கூடி நீருண்ண ஆண்டவன் "மாந்தாதா" என்ற சோழமன்னன். "ஒரு துறைப்புனல் சினப்புலியு மானு முடனே. உண்ணவைத்தவுரவோன்" (கலிங். இராச. 12) எனவும், ‘அடுபுலியும், புல்வாயும், கூடநீ ரூட்டிய கொற்றவன்,' (விக். உலா. வ. 9,10) எனவும், "புலிப்போத்தும் புல்வாயும், ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோன்" (கம்ப. குலமுறை 5) எனவும் வருதல் காண்க. மந்தாகினி - கங்கை. கங்கைகொண்டுவந்தவன் பகீரதன். இவன் தன் முன்னோர்களாகிய அறுபதினாயிரம் சகரரும் கபில முனிவர் சாபத்தீயால் வெந்து சாம்பலாயினர் என்பதும், அவர்கள் சாம்பலைக் கங்கைநீர் வந்து நனைத்தால் மேலான பதவிபெறுவர் எனவும் சான்றோர் சொலக் கேட்டுப் பல்லாண்டு தவம் புரிந்து கங்கையைப் பாதாளவுலகுக்குக் கொண்டு சென்றார் என்பது வரலாறு. பத்துத் தேர்களில் வந்தவரை ஒரு தேரிற் சென்று வென்றவன் தசரதன் ஆவான். தசரதன் - பத்துத் தேர் வென்றவன். சம்பராசுரன் என்பவன் மாயையால் பத்துத்தேரில் பத்து வடிவமாக வந்து தசரதனை வளைத்துப் போர் செய்தான் எனவும் அவனைக் கொன்று அமரரைக் காத்தான் எனவும் ஆனந்த ராமாயணம் கூறும். "அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு" (கம்ப. மந்திரப், 19) எனவும், ஒரு தேராலையிரண்டு தேரோட்டி யும்பர், வருதேரால் வான் பகையை மாய்த்தோன்" (இராசரா - உலா. வ. 21, 22) எனவும் வருவன காண்க. மறவோன் தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் என்பது பத்துத் தலையுடைய இராவணனைக் கொன்ற இராமனைக் குறிக்கும். உரும்+இன் = உருமின். இதில் இன் ஐந்தனுருபு ஒப்புப் பொருளில் வந்தது. இடியைப் போல; பத்து மலையிருப்பினும் அவற்றைத் தகர்த்து இடி உள்ளே செல்வது போல, இராமபாணம் ஒன்றே பத்துத் தலையையும் அறுத்துத் தெலைத்தது என இடியின் வலிமையை இராமபாணத்திற்கு ஒப்பாக்கினர். "மரந்தின்னூஉ வரை யுதிர்க்கும் நரையுருமின் ஏறனையை"(மதுரைக்காஞ்சி. 62, 63) என வருவது காண்க. இங்குப் பெருநற்கிள்ளி, மாந்தாதா, பகீரதன், தசரதன், இராமன் ஆகிய ஐவரும் கூறப்பட்டனர். பெருநற் கிள்ளியின் மைந்தன் மாந்தாதா, மாந்தாதாவின் மைந்தன் பகீரதன் என்று இவர்களை வழிவழியாகக் கொள்வது பொருந்தாது. தசரதன், அவன் மைந்தன் இராமன் என்பது மட்டும் பொருந்தும், இடையிடையே அரசு புரிந்த மன்னர் சிலரை விட்டும் கூறுகிறார் நூலாசிரியர் என்று உய்த்துணர்க.
|