பக்கம் எண் :

பக்கம் எண் :74

குலோத்துங்க சோழனுலா
 


 

20




25

 


30

 
தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்
கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும்
பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க
வாங்கெயி னேமி வரையாக மண்ணாண்டு
தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன்
றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு
மலையெறிய மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத்




 

வரிகள் 20 - 30 : நிலை தப்பா மீளி .............மன்னர்க்கு மன்னன்

சொற்பொருள் : நிலை தவறாத பேய்த்தலை கொண்ட பெருமங்கலமுடையான் முதன்மையாகக் கொண்டுவந்த படையெடுப்பின் பொருட்டு முற்காலத்தில் அவனுடைய கோட்டை வாயிற் காவலாக இருந்த பேயின் தலையை யிடித்து நொறுக்கிக்கொன்ற அரசனும், நாடோறும் தாமரையிலிருக்கும் பிரமன் படைத்த மக்கள் அனைவரையும் முதுமக்கட்சாடியில் வைத்துக் காத்த முதல்வனும், பூமி எல்லா மன்னர்க்கும் பொது வென்பது நீங்குமாறு வளைந்த சக்கரவாள மலையே கோட்டையாகக் கொண்டு உலக முழுவதையும் ஆண்டு வானில் அசைந்து நின்ற அசுரர் மாயக் கோட்டையையும் அழித்த ஒளியுடைய வாட்படை யேந்திய மன்னனும், உயர்ந்த திருமால் பள்ளி கொண்ட கடல்வறிதாகும்படி பூமியைக் காப்பதற்கு மேல்கடல் நீரைக் கீழ்கடலிலே பாயும்படி விடுத்த அரசனும், ஓடக் கோலையும் வருத்தி அலைவீசுகின்ற காவிரியை ஒருவழிப்படுத்துவதற்கு மலையை வெட்டிய வாட்படையுடைய வேந்தர்க்கு வேந்தனும்.

விளக்கம் : மீளி - வலிமையுடையவன். இது பெருமங்கலமுடையானைக் குறித்தது. கோட்ைடை வாசலிற் காத்திருக்கும் பேய் சோழனைக் கொன்றுவிடும். அஞ்சாது நீங்கள் சென்று போர் புரிமின் என்று வடவரசரைச் சோழன்மேற் போர் புரியுமாறு ஏவினான் என்றும், கரிகாற்சோழன் காளி தேவியின் அருளால் அப் பேயைக் கொன்றான் என்றும் அறியலாம். இதற்கு மேற்கோள் "கோட்டை வாசலிற் கூளிதன் பலத்தால், வாட்டமில் வளவனை மலைவறப் பொருதிடும், வடவரசரைப் பெருமங்கல முடையீர், படைபொருதவசயப் படுத்து மென் றேவலும், காத்தெழும் பத்திர காளியாலந்தப் போத்தலை கொண்டு பெரும்படை செயித்தோம்" (சோழ மண். 95 மேற்.) எனவும், "களத்திற் பொலிகா டவன் பணியக் கண்டான் கொண்டான் களவகுப்புத், தளத்திற் பெரிய வடவரசர் தாமேவிய பேய்த்தலை கொண்டான், உளத்திற் பரவு காளியருளுடையான் சோழ னுவப்புடையான், வளத்திற் பெருமங்கல முடையான் வளஞ்சேர் சோழ மண்டலமே" (சோழ மண். 94) எனவும் உ. வே. சா. குறிப்புரையிற் காட்டியது காண்க. இவ்வரலாறு நன்கு விளங்கவில்லை. இச் செயல் முதற் கரிகாலனைக் குறித்தது என்பது அவர் கூறியதே.்


 

      "முதுமக்கட்சாடி முதலோன்" என்றது நாபாகன். இவன் அரனுடைய தந்தை. இது விஷ்ணுபுராணத்தால் அறியப்படுவது. இவன் பெயர் சுரகுருவெனக் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் கூறுகின்றது. பதுமம் - தாமரை. கடவுள் - தெய்வம். பதுமக்கடவுள் என்பது பின்வரும் "படைப்பு" என்ற சொல்லின் குறிப்பினால் பிரமனை யுணர்த்தியது. இவன் அரசு புரியும் காலத்தில் இவன் வீரத்திற்கு அஞ்சியோ நெறி முறை கண்டஞ்சியோ இயமன் வந்து இவன் நாட்டு மக்களுயிரைக் கொண்டு போகாமல் விடுத்தனன் எனவும் கூனிக்குறுகி அனைவரும் உயிருடன் இருந்தனர் எனவும், அவர்களை யடக்கமாக வைத்துக் காப்பது குறித்து ஆய்ந்து குயவனைச் சாடி செய்து கொடுக்குமாறு கூறி அச் சாடியில் வைத்துக் காக்குமாறு பணித்தான் எனவும் தெரிகிறது. இவனை, "புவனி, மேல ணைத்துயிரும் வீவ திலையாகநமன் மேல்வென்றி கொண்ட வவனும்" (கலிங். இரா. 15) என்றும், "அணிபெற வெழுதிய அழகிய குரைகவினுடசெறி மட்சாடி, குடிபுக முடிபுனை சுரகுரு வழிமுதல் கொட்டுக சப்பாணி" (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்) என்றும் ‘சித்தமகிழ்ந் தீனமறச் செங்கோ னடாத்த நமன், உத்தமனென் றந்நாளுயிர் கொடுபோ காமையினால், மொய்த்தமுதி யோர்க்கு முதுமக்கட்சாடி பல, வைத்தகுல தீரனே மன்னாகோ மன்னாகோ (திருவெண்காட்டுப். சத்தியநல்விரதச் - 9) என்றும் பிற நூலாசிரியர் கூறுவது காண்க. விக்கிரமசோழனுலா 15, 16 வரியும் சங்கரசோழனுலா - 11, 12 வரியும் இச் செயலைக் காட்டுகின்றன. தூங்கெயிலெறிந்த சோழன் யாவன்? அவன் பெயர் யாது? வரலாறு யாது என்பன அறிதற்கு வழியின்று. தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் என்ற பெயரும் தூங்கும் எயிலெறிந்த செயலும் பல நூல்களிற் கூறப்பட்டுள்ளன. சிறுபாண் 79 - 82, பழமொழி 49, சிலப்பதிகாரம் 27 - 164, 5 : 29 மணிமேகலை 1 : 4, தொல்காப்பியம் களவியல் சூ. 11. நச். உரை, கலிங்கத்துப்பரணி இராச. 17, இராசராச சோழனுலா 25, 26. விக்கிர. உலா 16, 17 ஆகிய இடங்களிற் காண்க. சிலப்பதிகார நூலாசிரியரே மூன்று எயில் எனக் குறித்ததும், "திறல்விளங் கவுணர் தூங்கெயில்" (தொல். கள. 11. நச். மேற்) எனக் குறித்ததும் ஆய்ந்தால், அசுரர் மாயத்தால் வானில் அசையும்படி அமைந்துள்ள மூன்றரண்களையும் அழித்தவன் என்பது புலனாகும். உலகமெலாம் பொதுநீக்கி ஒராழிதனை யுருட்டிச் சக்கரவாளமலையையே தனக்கு அரணாகக் கொண்டு வாழ்ந்தவன் என இவன் சிறப்பு விளங்குகின்றது.

      மேல்கடல் கீழ்கடற்கு விட்ட கோன் என்பது சங்கரண (ஸம்கர்ஷண) சக்கரவர்த்தி எனவும், சமுத்திரஜித் எனவும் கூறுவர். இவன் கப்பல் போக்கு வரவு கருதி நடுவில் இருந்த மேட்டுநிலத்தினை வெட்டி மேல்கடலும் கீழ்கடலும் ஒன்றாக்கினன் எனத் தெரிகிறது. "புணரியொன்றினிடையொன்று புகவிட்டவவனும்" (கலிங்கத். 193), "குடகடற்குச் சார்பு குணகடலேயாகும், வடகடற்குந் தென்கடற்கு மன்னன்" (இராசரா. உலா 27, 28), "மேல் கடலில், வீங்குநீர் கீழ் கடலில் விட்டோனும்" (விக் - உலா 17, 18), எனப் பிறர் கூறுமாற்றானும் அறிக.

      காவிரியாற்றை ஒருவழிப்படுத்தியவன் காவேரிச்சோழன் என்பவன். மணிமேகலை நூல் இவனைக் காந்தமன் எனவும் காந்தன் எனவும் கூறுகின்றது. இவன் செயலை "மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன் வரராசராசன்கை வாளென்ன வந்தே" (தக்கயா. 549) என்ற அடியும், "பண்டு காவேரியைக் கிழக்கு நோக்கிப் போகவொட்டாது தடுத்த சையபருவதத்தை நடுவற வெட்டிய சோழன் ராசராசனுடைய திருக்கையிற் பிடித்தருளின வாள்" என்ற அதன் உரையும் விளக்குகின்றன. அன்றியும் "சைய, மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம்" (தொல். புறத். 36. நச். உரை, மேற்,) எனவும், "காவிரிப்புனல் கொணர்ந்தவனும்" (கலிங். இராச. 15) எனவும், மேக்குயரக், கொள்ளுங் குடகக்குவ டூடறுத்திழியத், தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும்" (விக் - உலா. 12, 13, 14) எனவும், "முடுகிக், கரையெறிந்தபொன்னிக் கடலேழுங் கோப்ப, வரையெறிந்த மன்னர்க்கு மன்னன்" (இராச - உலா 28, 29, 30) எனவும் வருவன இதனை விளக்கும். இங்குக் கூறப்பட்ட மன்னர் கரிகால் வளவன், நாபாகன் அல்லது சுரகுரு, தூங்கெயிலெறிந்த சோழன்,
சமுத்திரசித், அல்லது சங்கரணசக்கரவர்த்தி, காவேரிச்சோழன் அல்லது காந்தமன் என ஐவராவர்.