வரிகள் 30 - 40 : நிலையறியாத் .............களவழிப்பாக்கொண்டோன் சொற்பொருள் : நீரின் நிலையறிய முடியாத பழைமையான கடல் சூழ்ந்த பூமி வட்டமானது தன் தோள் வாகுவலயமாக முன்னர்த் திருந்தும்படி தன் வில்லால் நடுவிலுள்ள மலைகளையிடித்து மாற்றியவனும், விரைவாகக் கொலை நேரும்படி உடல் முழுவதும் தசைதசையாக அறுத்தாலும் சமனாக நில்லாத தராசுத் தட்டில் ஏறிப் பெருமையுடனிருந்த வேந்தனும், தலையில் ஏறிய மண்ணைக்கொண்டு காவிரிக்கரை கட்ட வராதவளுடைய கண்ணைக்கெடுத்த சோழனாகிய கரிகாலனும், மதிக்கத்தக்க படம் பல பொருந்திய முடியுடைய நாகவரசன் மகளை முற்காலத்துத் திருமணம்புரிந்த கிள்ளிவளவனும், சேரமான் கணைக்காலிரும்பொறையைச் சிறையில் வைத்துத் துன்புறுத்திப் பின்னர்ப் பொய்கையார் என்ற புலவர் பொருட்டுச் சிறைவீடுசெய்து அவர்பாற் கொடுத்துக் களவழி நாற்பது என்னும் நூலையேற்றுக் கொண்ட செங்கணான் சோழனும், விளக்கம் : தொன்மை + ஆர்கலி - தொல்லார்கலி - பழைமையான கடல். வலையம் - வட்டம். தோள்வலையம் - வாகுவலயம் என்ற அணி. நிலவட்டம் வாகுவலையம்போல இருக்க வேண்டும் என்று கருதி நாட்டின் நடுவேயுள்ள மலைகளையெல்லாம் வில்லாலே யிடித்து வட்டமாக மாற்றியவன் என்பது கருத்து. இவன் பிருது சக்கரவர்த்தி என்றும், இதனை விளக்குவது குமார சம்பவம் 1 : 2 ஆம் சுலோகம் என்றும் டாக்டர் உ. வே. சா. குறித்துள்ளார். அது தவிர வேறு குறிப்பொன்றுங் காணக்கிடைத்திலது. கொலையேற என்பது அகரங் குறைந்து நின்றது : தொகுத்தல் விகாரம். உடம்பு கொலையேற அடையக் கொய்தாலும் என மாற்றுக. உயிர் இறக்கும்படி முழுவதும் அறுத்தாலும் என்பது பொருள். எய்தாத்துலை; சமநிலையடையாது நின்றதுலை எனக் கொள்க. வீற்றிருந்த என்பது கவலையின்றி மகிழ்ச்சியோடு இருந்தான் என்பதை யுணர்த்தியது. இவன் சிபிச் சக்கரவர்த்தி என்பது எவர்க்கும் தெரியும். சிபி வரலாறு குறித்த நூல்கள் பல. சிலப். 20 : 51 - 2, 23 : 57 - 58 : 29; அம்மானைவரி. கலிங், இராச; 20. கம்பரா. திருவவ : 65, குலமுறை. 7, 6, விபீட; 110, திருக்குறள் 72, பரிமேலழகர் உரை, விக்கி. உலா 21, 22, இராச........உலா 11, 12, புறநா 37, 39, 43 - 46 ஆகிய இடங்களிலும் காணலாம். தலையேறு மண்கொண்ட கரை என மாற்றி மக்கள் தலைமேல் கூடைமண் ணேற்றிவைத்துச் சுமந்துகொண்டுபோய்க் கொட்டிக் கட்டிய கரை என விளக்கம் காண்க. கொண்ட கரை, பொன்னிக்கரை எனக் கூட்டுக. அக்கரை கட்டுதற்கு வாராதவள் என்க. ஈழத்துப்பிடாரி என்பது உ. வே. சா. குறிப்பு. வராதான் என்ற பாடமும் உள்ளது. வாராதான் என்ற பாடங்கொண்டால் முகரி எனக் கூறலாம். "தொழுது மன்னரே கரைசெய் பொன்னியிற் றொடர வந்திலா முகரியைப் படத், தெழுதுகென்றுகண் டிதுமிகைக்கணென் றிங்கழிக்கவே யங்கழிந்ததும்" (கலிங். இராச. 20) என வந்திருத்தல் காண்க. முகரி - பிரதாபருத்திரன் என்றும் அவன் படத்தின் விழியைக் கோலாற் சோழன் இங்குக் குத்தியவுடன் அங்கு அவன்விழி கெட்டது என்பதும் வரலாறு. "கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை, யெண்கொண்ட சோழ னிரங்கேசா" என வருவதும் இதனையுணர்த்தும். கண்கொண்ட கரிகாலன் என்பவன் இரண்டாங் கரிகாலன்போலும், முன்னர் ஒரு கரிகாலனை இவர் கூறியிருப்பதால். எண்கொள் பணம் - எண்ணிக்கொள்ளப்பட்ட படங்கள் எனக் கொள்ளினும் பொருந்தும். படங்கள் சேர்ந்த முடியுடையான் என்றது பாம்பரசன் (நாகராசன்) என்ற பொருள் தரும். பாம்பரசன் மகள் நாககன்னி. அவளைப் புணர்ந்தவன் கிள்ளிவளவன். இவன் வரலாறு பெரும்பாணாற்றுப்படை (29 - 31) நச்சினார்க்கினியர் உரையினும் மணிமேகலையில் 24 : 54 - 59, 25 : 178, 179, 29 : 3 - 5 ஆகிய இடங்களிலும் வந்துள்ளது, ஒன்றற்கொன்று சிறிது வேறுபாடுளது ஆய்ந்துகொள்க. கிள்ளிவளவன் வரலாற்றுச் சுருக்கம் பெரும்பாணாற்றுப்படை கூறுவது : சோழன் நாகருலகத்துச்சென்று நாககன்னியைப் புணர்ந்தான். நாககன்னி "யான் புதல்வனைப் பெற்றால் என்னசெய்வேன்" எனக் கேட்டாள். சோழன் தொண்டைக்கொடிய யடையாளமாகக் கட்டி விடுத்தால் யான் அவனுக்கு என் அரசுரிமை கொடுக்கிறேன் என்று கூறிவந்தான். அவ்வாறே அவள் செய்தாள். கடலில் உள்ள திரைகள் அப் புதல்வனைக் கொண்டுவந்து தந்தன. திரைதருதலால் ‘திரையன்' எனப் பெயர் பெற்றான் என்பது. மணிமேகலை கூறுவது : நெடுமுடிக்கிள்ளி என்பவன் பூஞ்சோலையிலிருப்ப ஆங்கொரு கன்னிகை வர அவளைக்கண்டு காதல் கொண்டு அவளுடன் கூடிக் கலந்து இன்பமெய்தி ஒரு திங்கள் இருந்தான். அவள் பாதலஞ் சென்றுவிட்டாள், இவனிடம் ஒன்றுங் கூறாமல். பின்னர்ச் சாரணன் ஒருவன் வந்தான். அவனிடம் வினவினான். அவன் நாகநாட்டரசன் வளைவணன்; அவன் மனைவி வாசமயிலை; இவ்விருவர் மகள்தான் பீலிவளை என்பவள். அவள்தான் உன்னோடு காதலிற் கூடியிருந்தவள். அவள் இனி யுன்னுடன் கூட வாராள். அவள் பெற்ற குழந்தைதான் வரும் என்றனன். அதுகேட்டுக் கிள்ளி வளவன் வாளாவிருந்தான். பின் அவள் தொண்டைக்கொடி கட்டிக் கப்பலில் ஏற்றியனுப்பினள். கப்பல் கவிழ்ந்து பின்னர்த் திரை கொண்டுவந்துதர வந்தான். அவனைக் கண்டு எடுத்து வளர்த்தான் என்பது. பொறையனை அணங்குபடுத்து - பொறையனைத் துன்பப்படுத்தி : இது சிறைச்சாலையில் வைத்துத் துன்பப்படுத்தியதைக் குறிக்கும். பொய்கைக்கு என்பது பொய்கையார் என்ற புலவர் வேண்டுகோளுக்காக. கொடுத்து - பொறையனை அப் புலவர் பால் விடுத்து என விரித்துக்கொள்க. "களவழி நாற்பது" என்ற நூலினைக் கேட்டுப் பின் சிறைவீடு செய்வதன் என வரலாறிருப்பதனால் "களவழிப்பாக்கொண்டு பண்டுகொடுத்தவன்" என மாற்றிப் பொருள் கொள்க. இவன் சோழன் செங்கணான் என்ற பெயருடையவன். திருப்போர்ப்புறத்துச் சோழன் செங்கணான் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பொருதுவென்று கைப்பற்றிச் சிறையில் வைத்தான். அதனையறிந்த பொய்கையார் சோழன் செங்கணான் வெற்றியைச் சிறப்பித்துக் "களவழி நாற்பது" என்ற நூல் பாடி யரங்கேற்றினர். செங்கணான் புலவர்க்குப் பரிசளிக்க அதனை மறுத்து இரும்பொறையைச் சிறைவீடு செய்வதே எனக்குப் பரிசிலாம் என்று கூறினர். அது கேட்ட சோழன் அவ்வாறே விடுதலை செய்தான் என்பது வரலாறாகும். இது புறநானூறு 74 ஆம் கவியின் கீழ்க் குறிப்பாலும், களவழி நாற்பது நூலின் முன்னுரையாலும் அறியலாம். விக்கி...........உலா 27, 28 ; இராசரா........35, 36; சங்கர : 27, 28 ; தொல். புறத். 36, நச். மேற், கலிங். இராச 19; இவற்றிலும் இக் குறிப்புக் காணப்படுகிறது. இங்குக் கூறப்பட்டவர் பிருது, சிபி, இரண்டாம் கரிகாலன், கிள்ளிவளவன், கோச்செங்கணான் என்னும் ஐவராவர். |